எந்த ஒரு நாட்டுக்கும் மிக முக்கியமான, பிரதான, தலையாய, உயிர்நாடியான இப்படி பலவகையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் அதன் பாதுகாப்புத் துறை. அவற்றின் ஆவணங்களை அப்படியே விருந்து வைப்பதென்பது கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் தெளித்து விளையாடுவதை போல கிளுகிளுப்பானது. அதிலும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உலகிலேயே சக்திவாய்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் மிக முன்னோடி என்று பலராலும் வாய்பிளந்து பார்க்கப்படும் ஒரு துறை. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் தன் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது. இதே போன்ற வெளியீடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆளாகியிருந்தால் 'நீ என்னத்த பெரிசா பண்ணிட்ட, போன வருசம் அவன் எப்படி அடிச்சான் தெரியுமா, போன வாரம் கூட எத்தன பேரு.. ' என்று கமுக்கமாகிப் போயிருக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் இந்திய சி.பி.ஐ இணையத்தளம் பாகிஸ்தான் பங்காளிகளால் ஹேக் செய்யப்பட்டது ஒரு உதாரணம்.
ஜூலியனுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தே இருந்தது. அமெரிக்காவிற்கு எதிரான தனது ஆப்கான் போர்க் குறிப்பு வெளியீடுகளுக்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை விக்கிலீக்ஸ் தளத்தின் பலத்தை, சட்டரீதியானப் பாதுகாப்பினைப் பரிசோதித்து உறுதி செய்து கொண்டே களமிறங்கினார். கேக் சாப்பிடும் போது சுற்றிலும் கடித்து சாப்பிட்டு விட்டு பின்பு கடைசியாக நடுவிலுள்ள செர்ரிப் பழத்திற்கு பாய்வதைப் போல, ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடுகள் சோமாலியா, கென்யா, ஸ்விஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் தேவாலயக் குழுமம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சாரா பாலின் ;) தொடங்கி அமெரிக்காவின் ஈராக் இராணுவ நடவடிக்கைகள் வரை ஒத்திகை பார்த்து விட்டே ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியிடப்பட்டன.
ஜூலியனின் வாழ்க்கை குறித்துக் கேள்விப் படும் போது தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே, உண்மையின் உறைவிடமே என்று வைரமுத்து, வாலி வகைக் கவிதைகள் எழுதத் தோன்றினாலும் ஜூலியனின் வாழ்க்கை மிக கடினமானது, மன அழுத்தம் நிறைந்தது. ஜூலியனுக்கென்று சொந்த வாழ்க்கை ஏதுமில்லை. எந்த விமான நிலையத்தையும் ஒரு சாதாரணப் பயணியாகக் கடந்ததில்லை, ஒவ்வொரு முறையும் பலமணி நேரச் சோதனையும், அவரது மடிக்கணினி முழுதும் பிரதியெடுக்கப்படுதலையும் தவிர்க்க முடிந்ததில்லை. ஜூலியன் சாதரணமாக தொலைபேசியில் பேசுவது கூட மிக மெல்லிய குரலில், சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் பேசுவது போல மிகுந்த இடைவெளி விட்டு, மிகக் குறைந்த வார்த்தைகளைப் பய்னபடுத்தியே பேசுவது வழக்கம். இது வரை யாருமே ஜூலியனை, ஒருமுறைத் தொடர்பு கொண்ட எண்ணில் மறுமுறை தொடர்பு கொண்டதில்லை. எவற்றையெல்லாம் மாற்றாவிட்டால், மாட்டிக் கொள்வோம் என்பது ஜூலியனுக்கு அத்துப்படி.
முதல் பரிட்சார்த்த முயற்சியாக சோமாலியாவின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர், தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு நம்பிக்கையான விவசாயக் கூலிகள் வேண்டி எழுதியக் கடிதம் வெளியிடப்பட்ட போது அது உண்மையா, பொய்யா என்ற விவாதமே மேலோங்கி நின்றது. சோமலியாவின் பதிலோ, மெளனம் சம்மதம். இதுவே பின்னாட்களில் தனது வெளியீடுகளோடு பெரிய பத்திரிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கான காரணம். ஊழலில் நமக்கே சவால் விடும் அளவுக்கு முன்னோடியான கென்ய அரசாங்கத்தின் ஊழல் தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக கென்யாவின், நைரோபியில் வாசம் செய்து கொண்டிருந்த ஜூலியன் ஒரு அதிரடியான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிட்டது. ஊழல் ஆவணங்கள் வெளியிடப்பட்ட மிகச்சரியாக ஒருவாரத்தில் ஜூலியன் தங்கியிருந்த ஒரு ரகசிய வீட்டில், நள்ளிரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்று தீபாவளி கொண்டாட முயற்சி செய்த போது, கென்யாவின் தரத்தை எடைபோட்டு ஜூலியனின் பாதுகாப்புக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் துரத்தி விட்டனர். அன்றிரவுக்குப் பிறகு யாரும் ஜூலியனைக் கென்யாவில் பார்க்கவில்லை.
அடுத்து ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்கிகளின் முறைகேடுகள், முறையற்ற நிதி கையாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் குய்யோ, முறையோவென தங்கள் வேட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூப்பாடு போட்டன. ஸ்விஸ் வங்கி அமெரிக்காவிலுள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விக்கிலீக்ஸ் தளத்தின் அமெரிக்க வழங்கிகளைச் செயலிழக்கச் செய்தது. ஒரு தளத்திற்கு வழங்கியென்பது ஒரே நேரத்தில் எத்தனை வேண்டுமானாலும் மாற்று ஏற்பாடாக செய்து வைக்கலாம். உலகமெங்கும் இணைய வல்லுநர்களை ஆரவலர்களாகக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் தளத்திற்கு கண்ணசைவில் அடுத்தடுத்த வழங்கிகள் தயாரான நிலையிலிருக்குமென்பதால் ஜூலியன் இதையெல்லாம் சட்டைச் செய்யவில்லை. இணையக் கோப்புகள் வழங்கிகள்(file servers), இணைய முகவரி வழங்கிகள்(dns servers) குறித்தும், அவை செயல்படுவிதம் குறித்தும் தனி பதிவு போடவேண்டும் ... அதை பின்பு பார்க்கலாம் ......
இப்படி அமைதியாக, மிகப் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஜூலியனையும் சீண்டிப் பார்த்து, சீற வைத்த சம்பவங்களும் நடந்தது.. அடுத்த பகுதியில்.
"சன்ஷைன் பிரஸ் (sunshine press) குழுமம் என்பது எங்களது வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர்களால் சேர்ந்தமைக்கப்பட்ட தளம். விக்கிலீக்ஸ் என்பது நாங்கள் செயல்படும் களம்." - ஜூலியன்
No comments:
Post a Comment
கருத்துக்கள்