கண்கள்.
மனித உடலில் மிக இன்றியமையாத, மென்மையான உறுப்புகள்.
கண்களில் எப்போது வேண்டுமானாலும் பாதிப்புகள் வரலாம். ஆனாலும் 40 வயது வரை இந்த உலகை கலர் கலராய், விதவிதமாய் பார்த்து ரசித்தவர்கள் அதன் பின்பு `என்ன கொஞ்சம் சிரமமாக இருக்கிறதே'-என்று புலம்ப தொடங்கு கிறார்கள். 40 வயதுக்கு பிறகு கண்களில், அது தரும் காட்சிகளில் லேசான அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டாலே, உடனே கவனித்து அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டால், தொடர்ந்து முழுமை யான பார்வை பலனை அனுபவிக்கலாம்.
பொதுவாக 40 வயதுக்கு பிறகு கண்களில் என்னென்ன பிரச்சினை ஏற்படும்? அதற்கு என்ன தீர்வு? என்பதனை விளக்குகிறது, இந்த கட்டுரை. 40 வயதுக்கு மேல் செய்தித்தாள் படிப்பது சிரமமாக உள்ளது, சிறிய எழுத்துக்கள் தெரிவதில்லை. இது எதனால் ஏற்படுகிறது?
40 வயதுக்கு மேல் அனைவருக்கும் இந்த நிலை ஏற்படும். இது ஒரு நோய் அல்ல. இதை சாளேஸ்வரம் அல்லது வெள்ளெழுத்து என்று கூறுவர். நமது கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸ் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இதனால் 40 வயதுக்கு முன்பு சிறிய எழுத்தையும் படிக்க இயலும். இந்த சுருங்கி விரியும் தன்மை 40 வயதுக்கு மேல் படிப்படியாக குறைகிறது. இதுவே சிறிய எழுத்துகளை படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இந்த குறைபாட்டை எப்படி சரி செய்யலாம்?
40 வயதுக்கு மேல் சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும். கண்ணின் லென்சின் சுருங்கி விரியும் தன்மை படிப்படியாக குறைவதினால் 2 வருடத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வெள்ளெழுத்தினால் கண்களுக்கு வேறு பாதிப்பு ஏற்படுமா?
வேறு பாதிப்புகள் ஏற்படாது. இந்த வெள்ளெழுத்து 40 வயதுக்கு மேல் அனைவருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான வயது சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஒருவர் 40 வயதுக்கு முன்பு கண் மருத்துவரை அணுகாமல் இருந் திருக்கலாம். ஆனால் 40 வயதில் ஒவ்வொருவரும் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி அணியவேண்டும். கண்ணாடியில் பைபோகல், புரோகிரசிவ் என இருவகைகள் உள்ளன. கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்கள்,
கண்ணாடி அணியாமலே வெள்ளெழுத்து குறைபாட்டை சரி செய்ய இயலுமா?
சரி செய்ய இயலும். அதற்கு நவீன அறுவை சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸை அகற்றி விட்டு, அந்த இடத்தில் விசேஷ செயற்கை லென்ஸ் (மல்ட்டி போகல்) பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சை 2 கண்களிலும் அடுத்தடுத்து செய்யவேண்டும். இந்த சிகிச்சைக்கு பிறகு ஆயுள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டாம். தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அறுவை சிகிச்சை ஒரு வரப் பிரசாதமாகும். காரணம், 40 வயதுக்கு மேல் இந்த சிகிச்சை செய்து கொண்டால் கண்ணாடி அணியாமல் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம். 40 வயதுக்கு மேல் கண்களில் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன? 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்கள் கண்களையும் பாதிக்கும். எனினும் ஆரம்ப நிலையில் இவை கண்களில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே மேற்கண்ட நோய்கள் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். இதனை லேசர் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
கண் பார்வை குறைவதற்கு வேறு காரணங்கள் உண்டா?
40 வயதுக்கு மேல் கண்களில் `க்ளோக்கோமா' என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கண்ணின் அழுத்தம் இயல்பை விட அதிகமானால் அதனை க்ளோக்கோமா என்று அழைக்கிறோம். இந்த நோய் வயதானவர்களுக்கே வரும். கண்ணில் அழுத்தம் அதிகம் ஆவதால் பார்வை நரம்பு பலவீனம் அடைகிறது. இதன் விளைவாக பக்கப்பார்வை பறிபோகும். இந்த நோயால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை முழுமையாக சரிசெய்ய இயலாது.
க்ளோக்கோமாவின் அறிகுறிகள் என்ன?
க்ளோக்கோமா ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே 40 வயது ஆனவுடன் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது க்ளோக்கோமா பாதிப்பு இருந்தால் தவறாமல், மருத்துவரை அணுகவேண்டும். க்ளோக்கோமா நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்தால் பார்வை பாதிப்பு ஏற்படாது. தற்போது இந்த நோயை குணப்படுத்த பலவிதமான நவீன சிகிச்சைகள் உள்ளன. சொட்டு மருந்து தவிர நவீன லேசர் சிகிச்சையும் உள்ளது. இந்த சிகிச்சையால் அறுவை சிகிச்சையின் அவசியம் குறைந்து உள்ளது. க்ளோக்கோமாவின் தீவிரம் அதிகமானால் பார்வை மிகவும் மோசம் அடைந்து விடும்.
40 வயதிலேயே கண்புரை பாதிப்பு ஏற்படுமா?
பொதுவாக கண்புரை 50-55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வரும். எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு முன்பே வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை கட்டுப்பாடு சீராக இல்லை என்றால் 40 வயதிலேயே கண்புரை வரலாம். இதை தவிர கண்ணில் அடிபட்டால் அல்லது ஸ்டிரொய்டு வகை மருந்துகள் உட்கொண்டால் 40-45 வயதிலேயே புரை வர நேரிடும். இதனை கண்புரை அறுவை சிகிச்சையால் சரி செய்திடலாம்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்