டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 1975ஆம் ஆண்டு ஆவணத்தில், ஸ்வீடன் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்து வந்த ராஜிவ் காந்தி தொழில்முனைவோர்' என்ற பெயரில் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறியுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களையும் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதை நிரகாரித்திருக்கும் காங்கிரஸ், விக்கிலீக்ஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகும். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி நிராகரித்திருக்கிறது. பாரதிய ஜனதாவோ, விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்கள் மிக முக்கியமானவை. நாட்டின் அனைத்து போர் தளவாட கொள்முதலிலுமே சோனியா காந்தி குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். போர்தளவாட கொள்முதல் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதே தி ஹிந்து நாளிதழ்தான் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் 1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க நேரிட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்துக்கள்