நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 28 October 2011

என்ன குறை கண்டாய் பெண்ணே ?


கணவன் மனைவி சம்பந்த பட்ட குடும்ப விசயத்தில் ஆண், பெண் என்று  பாகுபடுத்தி பார்ப்பதே தவறு. பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அதற்கான இடம் குடும்பம் அல்ல !!

பொதுவாக இப்படி பெண்ணுரிமை, சம உரிமை  என்று குரல் கொடுத்து கொண்டிருப்பதால் வீட்டிலும், குடும்பத்திலும் அது எதிரொலித்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குடும்பம்  வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!

மனைவி கணவனுக்கு சமம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும்  எடுத்துக்கொள்கிறாள், சில வீடுகளில் வலிந்து பெற்றுக்கொள்கிறாள், பல வீடுகளிலும் முழு உரிமையையும் எடுத்துகொண்டு குடும்பத்தை வழி நடத்துகிறாள்...இதுதான் இன்றைய நிதர்சனம்.ஆண்கள் விட்டுகொடுத்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஆளுமை செய்த காலம் குடும்பத்தை பொறுத்தவரை மிக குறைந்து விட்டது. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

அத்தகைய பெண்களில் சிலர் 'தான் சொல்வதே சரி' என்பது போல் நடந்து சிக்கல்களை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள்.

குடும்பத்தைக் கெடுக்கும் அறிவுரைகள் ?!!
  
மனப்பொருத்தம் என்பது ஏதோ கடையில் வாங்கும் பொருளல்ல...இரு மனமும் பொருந்தியதே திருமணம் என்று பெரியவர்கள் சொல்லி வச்சாங்க. இப்போது திருமணம் ஒருவழியாக பொருந்திவிடுகிறது, ஏனோ இரு மனங்கள்  பொருந்துவதே இல்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் மனம் பொருந்தவில்லை என்றால் அது நரக வாழ்க்கை. மனம் பொருந்தாமைக்கு கணவன் மனைவி மட்டும் காரணம்  இல்லை,பெண்களை பொறுத்தவரை திருமணத்தின் போதே அவர்களுக்கு ஓதப்படும் தவறான அறிவுரைகள்....!!?

* கணவனை கைக்குள் போட்டுக்கோ
* மாமியார், நாத்தனாரை தூரமா வை.
* கொஞ்ச நாள் போனதும் தனிக்குடித்தனம் போற வழியைப் பாரு. 
* எந்த முடிவும் நீ எடு, அடக்கி வை.

இந்த நான்கில் ஒன்றாவது நிச்சயம் எல்லா குடும்பத்திலும் திருமணத்தின் போது  பெண்ணின் காதில் ஓத படுபவை.....இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி வலுகட்டாயமாக பதிய வைக்கப்படுபவை, புது பெண்ணின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணருவதே இல்லை.
கணவன் நல்லவனாக இருந்தாலும் இந்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து விடுவதால், கணவனை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண் அணுக தொடங்குகிறாள். திருமண முடிந்த ஆரம்பத்தில் இது அவ்வளவாக வெளியே வருவதில்லை, போக போக கணவனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளணும் என்கிற எண்ணம் தலை எடுக்க தொடங்கும்.

இன்றைய பெண்களுக்கு ஆணை விட நாம் எதில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் அதிகம். ஆனால் இதை குடும்பத்தில் நிலைநாட்ட துடிப்பது சரியன்று. தவிரவும் ஆணுக்கு சமம் என்றால் சம மரியாதை கொடுக்க வேண்டுமே,அதுவும் இல்லை, தனக்கு(ள்) அடங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்...?!

அது என்ன ஆம்பளைங்க என்றாலே ஏதோ வேற்றுக்கிரக ஜந்து மாதிரி பார்க்கிறது...?!!! திருமணம் முடிந்த நாளில் இருந்து  கணவனை எப்படி எல்லாம் தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று பிளான் போடுவார்கள் சிலர் !! என்னவோ அதுவரை கணவன் ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தது போலவும், இவங்க புத்தி சொல்லி திருத்துற மாதிரியும்,  இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று அட்வைஸ் பண்றதா பார்த்தா......!? பாவம் அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்த ஆண். எல்லாவற்றிலும் பெண்ணின் பேச்சை கேட்கணும் என்றால் அந்த கணவனின் தனித்தன்மை என்ன ஆகும்? 

ஒரு சில ஆண்கள் மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாதவனாக, அடக்கி ஆளும் மனம் படைத்தவனாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் அணுகுவது அநியாயம். (ஒரு வேளை கணவன் அடக்கி ஆளும் மனம் கொண்டவனாக இருந்தாலும், மனைவியால் சந்தோசமாக குடும்பம் நடத்த இயலும் அது எவ்வாறு என்று பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.....!)

என்ன குறை கண்டாய் பெண்ணே ?

ஆண், பெண் யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிறைகள் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது கணவனிடம் மட்டும் நூறு சதவீத நிறைகள் இருக்கணும் என்று எதிர்பார்காதிங்க...! ஒரு பெண்ணிடம் உங்க கணவன் எப்படி என்று கேட்டு பாருங்க, "அய்யோ அவரா, அதையேன் கேட்குறீங்க..... வேலை  விட்டு வந்தாலும்  வீட்ல இருக்கறதே இல்ல, எப்பவும் நண்பர்கள் கூட வெட்டி பேச்சு தான், வீட்ல ஒரு துரும்பை கூட அசைக்கிறது இல்லை...எல்லாம் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மனுசனை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்......" இப்படி.....கேட்டவங்க  காது தீப்பிடிக்கிற அளவு போயிட்டே இருக்கு.....இதுவா நல்ல தாம்பத்தியம் ? இல்லவே இல்லை...!

பொதுவா குறைகளை பட்டியல் போடுவதை மனைவிகள் நிறுத்தவேண்டும்.....பதிலுக்கு கணவனும் மனைவியின் குறைகளை பட்டியல் போட தொடங்கிவிட்டால் இதற்கே பொழுது சரியாக இருக்கும், குடும்பம் நடத்த முடியாது. வீட்டில் குறை சொல்வது போதாது என்று உறவினர்கள் ,அக்கம்பக்கமும் சொல்லிவிடுவதால் சின்ன விஷயம் , பெரிய பிரச்னை அளவிற்கு போய்விடும். அடுத்தவர்களுக்கு நம் வீட்டு பிரச்னை ஒரு பொழுது போக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அதை பெரிதாக எண்ணிக்கொண்டு சில பெண்கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

ஒரு கணவனிடம் குறை என்றால் உதாரணதிற்கு குடிப்பழக்கம்.....

திருமணதிற்கு முன் ஒரு ஆண் குடிக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்/காரணம். ஆனால் திருமணதிற்கு பின் கணவர் குடிக்க தொடங்குகிறார் அல்லது அதிகமாக குடிக்கிறார் என்றால் அதற்கு முழு பொறுப்பு அவரது மனைவி என்பேன்....அது எப்படி அவருக்கு தொழில்/வேலை  நெருக்கடி இருக்கலாம், மன அழுத்தம் காரணமா குடிக்கலாம் அல்லது புதிய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற எந்த காரணமாக இருந்தாலும் மனைவியின் அன்பும், அரவணைப்பும், முக்கியமாக புரிதலும் சரியான அளவில் கணவருக்கு கொடுக்கப்பட்டு வந்தால் அங்கே எந்த கெட்டப்பழக்கமும் ஏற்பட வழியே இல்லை. பழக்கம் ஏற்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 'என் கணவன் சரியில்லை' என்று குறை சொல்லி புலம்பும் பெண்களுக்கு எனது ஒரே பதில் "தவறுகளின் ஆரம்பம் நீங்கதான்"

சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு  இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான்.  அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக  நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கணவனிடம் இருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இருக்கும் அவரிடம் நிறைகளை கவனத்தில் வையுங்கள். கூடுமானவரை இருக்கும் குறைகளை, நிறைகளாக மாற்ற முயலுங்கள்.....( 'இந்த மனுஷனிடம் நிறையா ? அப்படியெல்லாம் ஒண்ணுகூட இல்ல...!') நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! 

முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! 

ஒரு சில டிப்ஸ்.....

கணவரிடம்,

* எந்த பிரச்னைக்கும் டக்குனு தீர்வு சொல்றீங்க, எப்படிப்பா இப்படி...சூப்பர் !

* உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்,சான்சே இல்ல போங்க அபாரம் !

* நடை கம்பீரமா இருக்குங்க ! நெற்றியில் விழும் முன் முடி செம அசத்தல்பா !

* பேசுறப்ப நடுநடுவே சிரிக்கும் இந்த சிரிப்பு என்னை ரொம்ப ஈர்க்குதுங்க ! நீங்க இல்லாதபோதும் அந்த சிரிப்பு என் காதில் கேட்டுட்டே இருக்குங்க !! (ஒருவேளை லவ் பண்ணி இருந்தால் அப்போ இதை விட ஓவரா சொல்லி இருப்பீங்களே !! இப்பவும் சொல்லுங்க, தப்பு இல்ல...!)

இதே ரீதியில் சொல்லி பாருங்க.....(அப்புறம் ரிசல்ட் என்னனு என்கிட்டே சொல்ல வேண்டாம், ரிசல்ட் எப்படி  இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் !! ) 

இது தாங்க வாழ்க்கை...இப்படி சிம்பிளா, ஜாலியா வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிறதை விட்டுட்டு,   எப்பவும் கணவரை குறை சொல்லி அழுது புலம்பி நீங்களும் மன அழுத்தத்தில விழுந்து , அவரையும் வேற ஒண்ணுல விழ வச்சிட்டு, குழந்தைகளை பற்றியும் சுத்தமா மறந்துவிட்டு என்ன வாழ்க்கை வாழ்றீங்க.....!!? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...!!

வாழ்க்கை வாழ்வதற்கே .... 

1 comment:

  1. நல்ல பதிவு!
    சம உரிமை = பெண்ணாதிக்கம் என்றாகிவிட்டது.

    ReplyDelete

கருத்துக்கள்