தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன், அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி, இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்து காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள், இருபது பேரை ஒரேயொரு தனி மனிதன் பறந்து பறந்து தாக்கும் அசகாய சூரத்தனம் மிகுந்த ஆவேசமான குத்துச்சண்டைகள், ஒரு முழந்துணியுடன் மன்மதச் சரக்கை மலினமாய் கடைபரப்பும் இரவு ராணிகளின் குத்தாட்டங்கள் இல்லாத தமிழ் சினிமா அபூர்வம். இவை எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒட்டுமொத்தமாக நிராகரித்து இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்து, கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் 'உச்சிதனை முகர்ந்தால்.'
முற்றிலும் வணிகமயமாகிவிட்ட திரைப்படவுலகில் சமூக அவலங்களைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் ஒரு படத்தைக் கலைநுணுக்கம் கலையாமல், காண்பவர் உள்ளங்களை உலுக்கியெடுத்து விழிகளில் கண்ணீர் வழிய, இருதயத்தில் ரத்தம் சூடேற, இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருந்துவிடாமல் இன நலனக்குத் தன்னளவில் உருப்படியாக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பைத் தந்தாகவேண்டும் என்ற உணர்வை உந்தும் விதத்தில் உருவாக்கியிருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்; மிகையான நடிப்புக்கு இடமளிக்காமல் வெகு இயல்பாக ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சின்னச் சின்ன அசைவுகளிலும் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கும் கலைஞர்கள் சத்தியராஜ், சீமான், சங்கீதா, லட்சுமி, நாசர்; உச்சிதனை முகர்ந்து நம் வாழ்த்துக்களை வெளிப்படுத்தத் தூண்டும் நீநிகா; இளந் தென்றலாய் வீசியும் எரிமலையாய் பொங்கிப் புரண்டும் பாடல்களில் ரசவாதம் காட்டியிருக்கும் இசையமைப்பாளர் இமான்; ஒவ்வொரு வார்த்தையிலும் ஈழத் தமிழரின் இதயவலியை இறக்கிவைத்திருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் கூட்டுத் தவத்தில் உருவானதுதான் இந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைக் காவியம். செப்புக்காசும் வாங்காமல் இந்தப் படத்திற்கு வசனம் எழுத நேர்ந்ததில் என் பேனா எப்போதும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
புனிதவதி என்ற பதின்மூன்று வயது சிறுமி, உடலும் மனமும் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அவளுடைய வாழ்வு எப்படி சீர்குலைந்தது, அவளுடைய இனிமை ததும்பிய குடும்ப உறவுகள் எப்படி நிலைகுலைந்து நிர்மூலமாக்கப்பட்டன என்பதை ஒரு புள்ளியாக வைத்து உலகம் முழுவதுமுள்ள மனித குலத்தின் மனச்சான்றை உசுப்பிவிடும் வகையில் உருக்கமாகவும், அடிமனதில் உறைந்துகிடக்கும் ஒவ்வொருவருடைய மனிதநேயத்தை மலரச் செய்வதாகவும், கலைநயத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டு ‘உச்சிதனை முகர்ந்தால்’ உருவாக்கம் கொண்டிருக்கிறது.
உலகத்தின் பொதுமொழி மனிதநேயம். இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவரும் தவறாமல் கண்டு, கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்தியபடி திரையரங்குகளில் இருந்து வெளியே வருவார்கள் என்பது திண்ணம். இது ஒரு சாதாரணத் திரைப்படம் அல்ல. மனிதம் மறந்த மக்களுக்கும் இன உறவு துறந்த தமிழர்களுக்கும் சினிமா என்னும் சக்திமிக்க ஊடகத்தின் மூலம் நடத்தப்பட்டிருக்கும் ஓர் உயர்ந்த பாடம்.
எந்த நிலையிலும் திரையுலக தாழ்வாரத்தில் அடியெடுத்து வைக்கலாகாது என்று நெஞ்சுக்குள் நேர்ந்துகொண்டவன் நான். ஓர் உயர்ந்த இன உணர்வாளரும் தன்னலமற்ற போராளியுமாகிய புகழேந்தி தங்கராஜ், நம் இனத்துக்காக நடத்த இருக்கும் கலைவடிவம் சார்ந்த கூட்டுத்தளத்தில் ‘உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியபோதும் நான் பேனா எடுக்கத் தயங்கினேன். ஆனால் என் இல்லத்தில் அமர்ந்து பால்யபருவம்தொட்டு என்னுடன் நெருக்கமாக நட்புறவுகொண்ட புகழேந்தி கதைசொல்லத் தொடங்கியதும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது. என் உள்ளத்தில் அலையடித்த உணர்வுகள் அனைத்தையும் பேனா முனையில் பிரசவித்துவிட வேண்டும் என்ற கனல் உடல் முவதும் கனன்றது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த கலைக் காவியத்திற்கு என் பேனா வரைந்து கொடுத்திருக்கும் வசன ஓவியங்கள்.
சீற்றம் மிகுந்த சில வரிகள் தணிக்கைக் குழுவால் சிதைக்கப்பட்டு இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது என்னளவில் நிறைவை நான் அடைந்திருக்கின்றேன். என் பக்கத்தில் அமர்ந்து தனிக்காட்சியைக் கண்ட வைகோ பல இடங்களில் விம்மியதும், விழிநீர் சிந்தியதும் என் கரங்களைக் பற்றியபடி, “உங்கள் ஒவ்வொரு வசனமும் இயல்பாய் காட்சிகளுக்கு ஏற்ப எளிமையாய் கலைஞரைப்போல் எதுகை மோனைக்கு முக்கியத்துவம் தராமல், பாத்திரங்களின் பண்பறிந்து துல்லியமாய் வெளிப்பட்டு இருப்பது இந்த படத்தின் பெரியபலம்" என்று பரவசத்தோடு சொல்லி மகிழ்ந்தது இப்போதும் என் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது.
ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக மென்மையான உணர்வு படைத்த ஒவ்வொரு பெண்ணும் பிள்ளைகளுடன் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டிய படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. இதுபோன்ற நான்கு படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழீழம் உருவாவதற்கு தார்மீக துணையாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.
No comments:
Post a Comment
கருத்துக்கள்