எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.
இளமைப்பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரனும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
இல்லறம்
எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். அவர் தங்கமணியை மணந்தார். தங்கமணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த இல்லற வாழ்க்கையால் தங்கமணி கற்பமானார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.செல்லப் பிராணிகள்
எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரை நியமித்திருந்தார்.திரைப்பட வாழ்க்கை
முதன்மைக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை
இவர் , முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடை பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும்,தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988 இல் பிரிந்து 1989ல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அவர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியிலிருந்த போதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
மக்கள் தலைவரின் கடைசி நாட்கள்.......
1987 டிசம்பர் 2...
ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.
டிசம்பர் 5...
அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.
டிசம்பர் 6... சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.
டிசம்பர் 20... ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 22... சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.
டிசம்பர் 23...
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.
டிசம்பர் 24...
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.
No comments:
Post a Comment
கருத்துக்கள்