"இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..." என்று ‘பாட்ஷா’ திரைப்படப் பாடலில் வரி ஒன்று வந்து போகும். 64வது பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிகாந்த்தின் நீண்ட, நெடிய திரையுலகப் பயணத்தை ஒரு முறை மீள்பார்வை பார்க்கையில், அந்த வரிகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்கிறது மனது. இருக்கலாம். இல்லாமலா, ஒரு தெய்வத்தை ஆராதிப்பது போல மாநிலம் முழுக்க டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்&அவுட்களுக்கு பாலாபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடக்கும்?
இத்தனைக்கும், தமிழ் சினிமாவை புதிது, புதிதாய் நிறைய இளைஞர்கள் இன்றைக்கு ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் உருப்படி இல்லை என்றாலும் கூட, அவர்களுக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை மையமாகக் கொண்டு பல கோடிகள் வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களை விட இரு மடங்கிற்கும் அதிகமான வயதாகியும் கூட, இன்னமும் ‘மவுசு’ குறையாமல் வைத்துக் கொள்வது உண்மையாகவே சாகசம்தான். பேருக்குள்ளே காந்தம் இருக்கத்தான் செய்கிறது.
மக்களை ஆளுமைப்படுத்துகிற திறன், வாய்க்கப்பெறுவது சாதாரண காரியமல்ல. ஆனால், அந்தத் திறன் இருப்பது மட்டுமே போற்றுதலுக்கு உரியதுமல்ல. விகிதாச்சாரப்படி ஏறக்குறைய உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரும்பகுதியை தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்கிறது மது என்பதற்காக, மது போற்றுதலுக்கு உரிய, ஆராதிப்பதற்கான பொருளாகி விடாது. ரஜினி விஷயமும் அப்படியே. அவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கலாம். அது மட்டுமே தகுதி ஆகி விடமுடியாது.
ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவுக்கு அப்பால், அந்த மனிதரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதே சரியான ஒரு மதிப்பீட்டை நமக்கு முன்வைக்கும். ரஜினியை அந்தக் கோணத்தில் நாம் அணுகினால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. லட்சக்கணக்கான பேர் அவரது பெயரை தாங்கிப் பிடித்துக் கொண்டு பின்னால் வருகிறார்கள் என்றால், சினிமாவில் அவர் காட்டிய பொய்யான பிம்பங்களின் வெற்றி அது. ரஜினி என்ற மனிதனின் நிஜத்துக்காக குவிந்த கூட்டமல்ல அது.
தொழிலாளர்களின் உரிமைக்குப் போராட, தானும் ஒரு சக தொழிலாளியாக... படு விலையுயர்ந்த காலணி, ஆடைகள் அணிந்தபடி வசனங்கள் பேசுவது, கெட்டவர்களை ஒழித்துக் கட்ட தாவிக் குதித்தும், எகிறிப் பாய்ந்தும் தாக்குவது எல்லாமே, சினிமாவுக்கான பொய் பிம்பங்கள்தானே? நிஜத்தில் ரஜினி யார்? அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குறியாக்குகிற விலை உயர்வுகளின்போது, பன்னாட்டு நிறுவனப் படையெடுப்புகளால் சிறுதொழில் செய்பவர்கள் நிலைகுலைந்து நின்றபோது, பக்கத்து மண்ணில் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டபோது, மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மனிதர்கள் மோதிக் கொண்டபோது.... சினிமா திரைக்கு வெளியே இருக்கும் ரஜினியால் என்ன சாகசங்கள் செய்யமுடிந்தது?
தொழிலாளர்களின் உரிமைக்குப் போராட, தானும் ஒரு சக தொழிலாளியாக... படு விலையுயர்ந்த காலணி, ஆடைகள் அணிந்தபடி வசனங்கள் பேசுவது, கெட்டவர்களை ஒழித்துக் கட்ட தாவிக் குதித்தும், எகிறிப் பாய்ந்தும் தாக்குவது எல்லாமே, சினிமாவுக்கான பொய் பிம்பங்கள்தானே? நிஜத்தில் ரஜினி யார்? அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குறியாக்குகிற விலை உயர்வுகளின்போது, பன்னாட்டு நிறுவனப் படையெடுப்புகளால் சிறுதொழில் செய்பவர்கள் நிலைகுலைந்து நின்றபோது, பக்கத்து மண்ணில் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டபோது, மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மனிதர்கள் மோதிக் கொண்டபோது.... சினிமா திரைக்கு வெளியே இருக்கும் ரஜினியால் என்ன சாகசங்கள் செய்யமுடிந்தது?
சிகரெட்டை மேலே விட்டெறிந்து, திரும்பி வரும்போது உதட்டால் ‘கேட்ச்’ பிடிக்கும் சாகசம், நியூட்டன் அரும்பாடு பட்டுக் கண்டறிந்த புவியீர்ப்புக் கொள்கைகளை பொய்யாக்குகிற அளவுக்கு தரையில் கால் படாமல் தாவித் தாவி வானத்தில் சர்க்கஸ் நடத்தும் செயல்கள்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறதே தவிர... நிஜ வாழ்க்கையில் அவரது ஒரு சிறு துரும்பளவு செயல் கூட இதுவரை போற்றப்பட்டதாகவோ, பின்பற்றப்படுவதாகவோ தகவல் இல்லை.
ரஜினி என்கிற மனிதரின் பொய் பிம்பங்கள் மட்டுமே காலம் கடந்தும் நிற்கிறது என்றால், அதில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகம் கொண்டாடக்கூடிய தலைவர்களின் வாழ்வை புரட்டிப் பார்க்கையில், அவர்களது நிஜங்களே, புகழுக்குக் காரணமாய் நிற்பதைப் புரிந்து கொள்ளமுடியும். ‘ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?’ என்று சினிமாவில் பாடியவர் அவர். ஒழுங்காக இருக்கும் தலையை, அடிக்கடி கலைத்து விட்டுக் கொள்வதும், சிகரெட்டை புதுப்புது விதமாய் பிடிப்பதும் மட்டுமே, தங்கக்காசுகளைக் கொடுத்த மக்களுக்கு அவர் திருப்பித் தருகிற விஷயங்கள் என்றால், அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இல்லை.
சினிமாத்திரைக்கு வெளியேயும் அவர் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பொய்களைப் புறந்தள்ளி நிஜத்தின் பக்கம் கவனம் திருப்புவாரா ரஜினி?
நன்றி :http://www.keetru.com/
என்னை அதிகம் சிந்திக்க வைத்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. நன்றி!
ReplyDelete