பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், பாவங்கள், கர்ம வினைகள், மரண பயம்,
எம பயம் போன்றவை நீங்கிட விரதங்கள், வழிபாடுகள் காலம் காலமாக
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி மிக
முக்கிய விரத நாளாகும். பஞ்ச ராத்திரிகள்: சிவனுக்குரிய ராத்திரிகள்,
நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி,
மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி
திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர்
பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார
தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற
தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக
கருதப்படுகிறவர்கள். இதற்காகவே ‘ஷராத்ரீசூக்தம்’ என்ற பாராயணம் தனியாக
உள்ளது.
சிவராத்திரி வரலாறு: சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன்
உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும்
அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த
இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும்
உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி
கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா
யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு
முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய
காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள்
சொல்கின்றன.
மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில்
உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும்,
ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும்,
கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில்
நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள்
என்று சிவபுராணம் சொல்லும்.
ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அன்றைய
தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்தரி என
கூறுவர்.
தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை
ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு
காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி
காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும்.
சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமானை தியானித் தான். அப்போது ஆதி
சேஷன்முன் தோன்றிய ஈசன், சோழ நாட் டில் காவிரிக்கரை யில் உள்ள
தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திரியில் வழிபடுமாறு கூறினார். அதன் படி
கும்ப கோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலத்தில் வழிபட்டபின்,
நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும்,
திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரில்
உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றான்
என்று புராணம் கூறும்.
இதுபோல சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் பல உள்ளன. அட்ட
வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை,
திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர்
ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை,
திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம்,
திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய
திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம்
கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை
மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு,
திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு,
திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய
ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள்
அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது
குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது “கோவிந்தா கோவிந்தா’ என்று குரல்
கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும்
என்பர்..
சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக்
கருதப்படுகிறது. இதை “லோக சிவராத்திரி’ என்று சொல்வார்கள். இவ்வாண்டு
திங்கட்கிழமையில் சிவராத்திரி அமைவது குறிப்பிடத் தக்கது. அன்று விரதம்
கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக
ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.
சிவாலய தரிசனம்:
சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும்
சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக
ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன்
அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம்
உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மெய்சிலிர்க்க கண்டு தரிசித்து,
அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஆன்றோர்,
சான்றோர் வாக்காகும். அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், தயிர், சந்தனம்,
பழங்கள் போன்றவற்றுடன் கரும்புச்சாறு வழங்குவது மிகவும் புண்ணியமாகும்.
கரும்புச்சாறு தருவதால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது
ஐதீகம்.
சிவராத்திரி விரதம் சற்று கடினமானது. கடந்த காலங்களில் முன்னோர்கள் முறையாக அதை கடைபிடித்தனர். இந்த காலகட்டத்திலும் சிலர் முடிந்தவரை அதை கடைபிடித்து பின்பற்றுகின்றனர். சிவராத்திரி அன்று சூரிய உதயத்துக்கு முன்பு நீராடி அன்று முழுவதும் உண்ணா நோன்பிருந்து பகல் முழுவதும் சிவபுராணம், சிவஅஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மாலையில் சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும். இரவு நான்கு ஜாமங்களில் கலந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.
வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு உள்ள பலன்கள் எல்லாம் சைவ வழிபாட்டில் சிவராத்திரிக்கு உண்டு. சிவராத்திரி விரதமும் சிவ தரிசனமும் எமபயம், மரண பயம் போக்கி, முக்திக்கு வழிகோலும் என்பது நாயன்மார்களின் கூற்றாகும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களிலும் குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு ஆகிய பஞ்சரத்ன சபைகளிலும் ஆடல்வல்லானின் தரிசனத்தை காண்பது மிகவும் சிறப்பு என்பது மட்டுமின்றி, புண்ணியம் சேர்ப்பதாகும்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்