விஜயகாந்தை அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றிய பின் ஜெயலலிதா, “எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க கீழ்த்தரமான பேச்சுகளையெல்லாம் இங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைவரும் பார்த்தார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதத்துக்கும், அவருடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்துக்கும் தண்டனை அளிக்க வேண்டுமென்றால் அவர்களை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதைத் தவிர்த்து குறைந்தபட்ச நடவடிக்கையாக இந்தப் பிரச்னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதே வெற்றியைத்தான் நாங்கள் பெற்றிருப்போம்.
அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவது என தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதன்படிதான் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முடிவுகள் அமைந்தன.
தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன; இத்தனை பேரவை உறுப்பினர்கள் இன்று இந்த அவையில் வந்து தேமுதிக சார்பில் அமர்ந்திருக்கின்றார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.
எனது கட்சிக்காரர்களை திருப்திபடுத்துவதற்காகவே இந்தக் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தேன். கூட்டணி அமையாவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. பேரவைத் தேர்தலில் எதைச் சாதித்துக் காட்டினோமோ, அதைவிடக் கூடுதல் இடங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்.
தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தேமுதிகவுக்கு இத்தனை உறுப்பினர்கள் கிடைத்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் தகுதியும் கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி சேராவிட்டால் தேமுதிகவுக்கு கடந்த தேர்தலில் ஒரு இடம்கூடக் கிடைத்திருக்காது.
தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவரும் அவருடைய சட்டப் பேரவை உறுப்பினர் களும் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு (தேமுதிக) வர வேண்டிய ஏற்றம், வரக்கூடிய ஏற்றம் எங்களால் வந்து முடிந்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்கு முகம்தான். அதைச் சரித்திரம் சொல்லும்” என்று ஜெயலலிதா பேசினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் பேசிய பேச்சுதான். சந்திரக்குமார் தன் பேச்சில் பேருந்துக்கட்டண உயர்வு மக்களை பாதித்துள்ளது என்று பேசினார். அவரது பேச்சில் குறுகிட்ட அமைச்சர் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளிவிபரங்களோடு, டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார். சந்திரக்குமார் தொடர்ந்து, பால்விலை உயர்வைப் பற்றிப் பேசினார். செங்கோட்டையன், எங்களைப்போல மாடு வைத்திருப் பவர்களுக்குத்தான் விவசாயிகளின் சிரமம் தெரியும் என்றார். சந்திரக்குமாரும் சளைக்காமல், நாங்களும் தொழிலாளியாக இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து சந்திரக்குமார், “மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இந்த பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இந்தப் பேரவையில் பேசினால் எங்களை எல்லோரும் சாடுகிறீர்கள்” என்றார்.
பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, சந்திரக்குமாருக்கு ஆதாரங்களோடு பதில் சொல்லாமல், நீங்களெல்லாம் சட்டசபைக்குள் நுழைந்ததே எங்களால்தான் என்றார். அதற்கு சந்திரக்குமார், எங்களால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள், உண்மையிலேயே துணிச்சல் இருந்திருந்தால், கட்டண உயர்வுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டியதுதானே என்றார்.
அப்போது எழுந்த ஜெயலலிதா, “ உறுப்பினர் சந்திரகுமார், விவரத்தின் அடிப்படையே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது மாநில அரசு அல்ல. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என ஒன்று இருக்கிறது. அதற்கு மின் கட்டணங்களைச் சீரமைப்பது குறித்து மின்சார வாரியம் தங்களது விண்ணப்பத்தை அளிக்கும்.
அதன்பின், அந்த ஆணையம் மாநிலம் முழுவதும் மக்கள் கருத்தை அறிய பல கூட்டங்களை நடத்தும். அது விதிகளில் உள்ள ஒரு நடைமுறை. ஏதோ தான்தோன்றித்தனமாக இந்தக் கருத்துக்கணிப்பு நடைபெறவில்லை. அப்படி நடத்தியாக வேண்டும் என்பது விதிமுறை. மக்களுடைய கருத்தை அறிந்து அதன்பின் அந்த ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணங்களை நிர்ணயிக்கும்.
எனவே, சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மாநில அரசு மின் கட்டணங்களை உயர்த்தி விடும் எனச் சொல்வது பேரவை உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது. பஸ் கட்டணங்கள், பால் விலையை உள்ளாட்சித் தேர்தலை முடித்து விட்டு உயர்த்தியதாகவும், முன்பே செய்திருந்தால் தெரிந்திருக்கும் என்று சவால் விடும் தொனியில் பேசினார்.
கட்டண உயர்வுகளை அறிவித்த போது, மிகுந்த வருத்தத்துடன் வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக மக்களுக்கு விளக்கிச் சொன்னேன். இங்கு பேசிய சந்திரகுமார், ஒரு சவால் விட்டிருக்கிறார். அவருக்கு பதில் சவால் நான் விடுகிறேன்.
சங்கரன்கோவிலில் நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு (தேமுதிக) திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் உயர்த்திய பிறகு சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் (தேமுதிக) முடியுமா என்பதை யோசித்து விட்டுப் பேசுங்கள்.
இதுதான் தொடக்கப்புள்ளி. ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் வகையில், விஜயகாந்த், “கடந்த 2006 முதல் 2011 வரைக்கும் இடைத்தேர்தல்கள் எவ்வளவோ நடைபெற்றன. அந்த தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன் என்று சவால் விடுகிறீர்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார்கள் என்பது கடந்த காலங்களிலும் தெரியும். இப்போது நீங்கள் எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் என்பதும் தெரியும்.
உடனே ஜெயலலிதா, “தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்.”
விஜயகாந்த், “நாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் தாருங்கள். சங்கரன்கோவில் என்று சொன்னால், பெண்ணாகரத்தில் ஏன் தோற்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள். அங்கு நடந்த இடைத் தேர்தலில் உங்களுக்கு டெபாசிட் காலி ஆயிற்றே அப்போது என்ன ஆனது ?” என்றார்.
பன்னீர்செல்வம் எழுந்து, “திமுக ஆட்சியில் இடைத் தேர்தல்களில் நாங்கள் (அதிமுக) வெற்றி பெறவில்லை. திமுக எந்த மாதிரியான வெற்றியைப் பெற்றது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடந்தது. சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 3-ல் 2 பங்கு இடங்களில் கிடைத்த வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வன்முறை நடந்ததா? முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறோம்.”
விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடந்ததா எனக் கேட்கிறார். தேர்தலின் போது எனது தொகுதிக்குச் சென்றிருந்தேன். அதிகாரிகளை வைத்து தேர்தலை எப்படி நடத்தினார்கள் எனப் பார்த்தேன். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு நிகழ வாய்ப்பு இருக்கிறது என நீங்களே கூறினீர்கள். அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தோம். நீதிமன்றத்துக்குச் சென்றோம்.”
விஜயகாந்துக்குப் பதிலளிக்க செங்கோட்டையன் எழுந்தார். சபாநாயகர் ஜெயக்குமார், “அமைச்சர் பதில் சொல்கிறார். அமருங்கள். அமைச்சர் பேசுகையில் பேசுவது மரபல்ல” என்றார். உடனே விஜயகாந்த் அமர்ந்தார்.
இதன்பிறகுதான் ரசக்குறைவான சம்பவங்கள் அரங்கேறின. சட்டசபையில் அன்று என்னதான் நடந்தது என்று, அங்கே இருந்த பத்திரிக்கையாளர்களை விசாரித்த போது, விஜயகாந்த் அமர்ந்ததும், அவரை நோக்கி, எம்எல்ஏக்கள், சின்னசாமி மற்றும் கலைராஜன் ஆகியோர் ஆபாசமாக சைகை செய்து, தகாத வார்த்தைகளை தொடர்ந்து பேசியிருக்கின்றனர். நத்தம் விஸ்வநாதன் எழுந்து, “இது சினிமா இல்ல. பத்து பேர நீ அடிக்க முடியாது. உட்காரு…” என்று பேசியிருக்கிறார். இவர்கள் பயன்படுத்தியதில், எழுதக்கூடிய வார்த்தை, “டேய் குடிகாரா உட்கார்றா” என்பது மட்டுமே. மற்றவற்றை யூகித்துக் கொள்ளுங்கள். இதைப்பார்த்துதான் விஜயகாந்த் கடும் கோபம் அடைந்து எழுந்து கையை நீட்டி கடும் கோபத்துடன் நாக்கைக் கடித்துக் கொண்டு, கத்தியிருக்கிறார். கத்துகையில், விஜயகாந்த்தும், தகாத வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.
இதன் பிறகே அவரும், அவர் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும், வெளியேற்றப்பட்டனர்.
ஜெயலலிதா இப்படிப் பேசுவது புதிதல்ல. 1991ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவுக்கும், ஏராளமான வேறுபாடுகள் இருந்தது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். இந்த ஆட்சி பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைப் பார்வையிடுபவர்கள், ஜெயலலிதா பக்குபப்பட்டிருக்கிறார் என்றே கருதினார்கள். ஆனால், சட்டசபை சம்பவங்கள், அது பொய் என்பதை நிரூபித்துள்ளது.
கருணாநிதி ஒரு பிறவி அரசியல்வாதி. அவருக்கு பேச்சு, மூச்சு, உணவு, உடை, நீர், அனைத்துமே அரசியல்தான். தன்னுடைய மனைவிகளுக்கிடையிலும், பிள்ளைகளுக்கு இடையிலுமே அரசியல் செய்யக்கூடியவர் கருணாநிதி.
ஆனால் ஜெயலலிதா அரசியல்வாதியாக சூழல் காரணமாக உருவாக்கப் பட்டவர். ஜெயலலிதாவை ஆங்கிலத்தில் A reluctant politician என்பார்கள். 1989ல் திமுக ஆட்சியின்போதே, ஜெயலலிதா தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதம், அப்போது டிஜிபியாக இருந்த துரையிடம் கிடைத்ததும், அதை எடுத்துப் போய் சபாநாயகரிடம் அளித்து, ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க முயற்சித்தார்கள். ராஜினாமா செய்து விட்டு, அரசியலை விட்டே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா, இதன் காரணமாகவே, நான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதா, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தன்னுடைய வீட்டு பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்து விட்டுப் போய்விடுவார். வெளியில் வரவே மாட்டார்.
1996 தேர்தல் தோல்விக்குப் பிறகும், ஜெயலலிதா அரசியலை விட்டு ஓய்வு பெற்று விடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனக்கு இனி அரசியல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அந்தத் தேர்தலில், அதிமுக அடைந்த படுதோல்வியையும் தாண்டி, ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மன்னார்குடி வகையறா ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே, ஜெயலலிதா அரசியலை விட்டு விலகலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது.
ஜெயலலிதாவின் பேச்சும் நடவடிக்கைகளும், அவர் கடந்தகாலத்தில் நடந்த தவறுகளில் இருந்து எந்தப்பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.
“தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்” என்று ஜெயலலிதா சொன்னது நாகரீகமற்ற வார்த்தை மட்டுமல்ல ஆங்கிலத்தில் Hitting below the belt என்பார்களே.. அந்த வகையைச் சார்ந்தது. இந்த வார்த்தையை ஜெயலலிதாவைப் பார்த்தும் கேட்கலாம்தானே… “தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.” என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகள் அவர் நேர்மையற்றவர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
2011 தேர்தலில் அல்ல, 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே, அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. 2011 தேர்தலில், தேமுதிக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, கூட்டணிக்காக தவம் கிடந்தன என்பதே உண்மை. அது வரை ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்லி வந்தவர், ஏற்கனவே ஆண்டவரோடு கூட்டணி சேர சம்மதித்தன் மர்மம், சோர்வடைந்த தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்ட, வெற்றி ஒன்றே வழி என்பதுதான்.
2011 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தன்னுடைய அரசியல் எதிர்காலமே சூனியமாகி விடும் என்பதை ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருந்தார். மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தால், பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை உறுதி என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிந்திருந்தார். மேலும் அதிமுக கட்சியே கரைந்து போகும் சூழ்நிலை இருந்தது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்திருந்தார். இதைத்தவிரவும், விஜயகாந்த், தொடர்ந்து பெற்று வந்த 9 முதல் 10 சதவிகித வாக்குகள், அவசியம் என்பதை ஜெயலலிதா புரியாதவர் அல்ல. அது நன்கு புரிந்ததால்தான், 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மூத்த தலைவர் வைகோவின் மதிமுகவுக்கு, 17 சீட்டுகளும், கட்சித் தொடங்கி 3 ஆண்டுகளே ஆன விஜயகாந்துக்கு 41 சீட்டுகளையும் ஒதுக்கினார் ஜெயலலிதா.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து விஜயகாந்தை இடதுசாரி மற்றும் இதரக்கட்சித் தலைவர்கள், சந்தித்து, மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்தை முன்வைத்தனர். அப்படி மூன்றாவது அணி அமைந்திருந்தால், ஜெயலலிதா இப்படிப் பேசியிருப்பாரா ? உடனடியாக அதிமுகவின் மூத்த தலைவர்களை அனுப்பி, விஜயகாந்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது யார் என்பது ஜெயலலிதாவின் மனசாட்சிக்குத் தெரியும்.
“தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.” என்ற ஜெயலலிதாவின் பேச்சு, அவரது ஆணவத்தையும், அனுபவமின்மையையுமே காட்டுகிறது.
ஒரு அரசியல்வாதியாக, மூத்த தலைவராக இருப்பவர், யோசித்துப் பேச வேண்டும். மனதில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது. அதுவும், பதவியில் இருக்கையில், மேலும் கவனத்தோடு இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா கடந்த காலங்களிலும் கூட, வாய்க்கு வந்ததையே பேசியிருக்கிறார்.
1991-1996 அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் என்று நினைவு. நெடுஞ்சாலைகளில் அடிக்கடி, கொள்ளைகள் நடப்பதாகக் கூறினார்கள். உடனே ஜெயலலிதா எழுந்து, “மத்திய அரசு எனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக ஆட்களை அனுப்பி கொள்ளையடிக்க வைக்கிறது” என்றார். இதைவிட சிறுபிள்ளைத்தனமான பேச்சை எங்காவது கேட்டிருக்கிறீர்களா ?
2001ல், ஜெயலலிதா கஜானா காலி என்றார். கருணாநிதி அரிசி இருக்கிறது என்றார். அதற்கு ஏதாவது பதில் சொல்லவேண்டுமே என்பதற்காக சட்டசபையில் ஜெயலலிதா, அத்தனை அரிசியும் புழுத்துப் போன அரிசி என்றார். அதிமுக அடிமைகள், அரிசி நாற்றம் அடிக்கிறது, விலங்குகள் கூட உண்ணாது என்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதா புழுத்துப்போன அரிசி என்று சொன்ன அத்தனை அரிசியும், அதிக விலைக்கு கேரளாவிற்கு விற்கப்பட்டது. சட்டசபையில் முழங்கிய ஜெயலலிதா அரிசியைப் பற்றி பிறகு பேசவேயில்லை.
சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றி சட்டசபையில் விவாதம் வந்தது. கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி தினகர் வீரப்பனுக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டது என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்று ஜெயலலிதா சட்டசபையில் கூறினார். அந்தப் பணத்தில் கருணாநிதிக்கும் ஒரு பெரும் பங்கு போனது என்று கூறினார். திமுக உறுப்பினர்கள் நிரூபிக்க முடியுமா என்று கேட்டனர். உடனே ஜெயலலிதா இன்றே விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று அவையில் அறிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் ரஜினிகாந்திடம் கூட வாக்குமூலம் வாங்கப்பட்டது. வீரப்பனுக்கு பணம் கொடுத்தது உண்மை என்றாலும் கூட, யாராவது பணம் கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா ? ராஜ்குமாரின் மகன்கள் கூட பணம் கொடுக்கப்படவில்லை என்றனர். ரஜினிகாந்தும் மறுத்தார். இந்த விசாரணைக்காக ஒரு வருடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நேரமும், உழைப்பும் வீணானது.
இதுபோன்ற, முன்யோசனை இல்லாத, நிதானம் தவறிய பேச்சுதான் ஜெயலலிதா புதனன்று சட்டப்பேரவையில் பேசிய பேச்சும். விஜயகாந்த் சுட்டிக்காட்டியதில் உண்மை இல்லாமல் இல்லையே.. பென்னாகரத்தில் டெபாசிட்டை அதிமுக இழந்தது உண்மைதானே.. அதற்கு முன் நடந்த மூன்று தொகுதிக்கான இடைத்தேர்தல்களில், அதிமுக போட்டியிடவே இல்லையே… ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்பது அப்பட்டமான உண்மையாயிற்றே… இப்படி ஒரு சவாலை விடுவது, ஜெயலலிதாவுக்கு அழகா ?
விலைவாசி உயர்வைப்பற்றிப் பேசுவது எதிர்க்கட்சியின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டியது அரசின் கடமை. யாருமே எதிர்த்துப் பேசக்கூடாது என்று ஜெயலலிதா எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.
கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில், அதிமுகவின் கூட்டணிக் கட்சித்தலைவர் சரத்குமார், ஜெயலலிதாவைப் பார்த்து, “நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற…” என்று பாடியபோது, சிரிப்பை அடக்கமுடியாமல் மகிழ்ச்சியை தெரிவித்த ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள் குறையை சுட்டிக்காட்டினாலும் அதே போல மகிழ்ச்சியோடு பதில் சொல்ல வேண்டும். அந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, தேமுதிகவின் மாஃபா பாண்டியராஜன் பட்ஜெட்டில் சில குறைகளை சொன்னதும், கடும் கோபமடைந்த ஜெயலலிதா, பாண்டியராஜன் விபரமறிந்து பேச வேண்டும் என்று எரிச்சலாக பதிலளித்து, பாண்டியராஜனை பேச விடாமல் தடுத்தார்.
இந்த கூட்டத்தொடரிலும், பண்ருட்டி ராமச்சந்திரன், தானே புயல்பாதிப்பு பற்றிப் பேசிய உடனேயே, எழுந்த ஜெயலலிதா, எனது அரசு போல, நடவடிக்கை எடுக்க உலகத்தில் அரசே இல்லை என்று கடும் கோபத்துடன் பதில் கூறினார். எதிர்த்து யாருமே கேள்வி கேட்காமல் இருக்க, மற்ற கட்சி உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன் போன்ற அடிமைகள் இல்லையே….
புதனன்று நடந்த விஜயகாந்த் மோதல் விவகாரத்திலும், ஜெயலலிதா நேர்மையில்லாமலேயே நடந்து கொள்கிறார். அரசு வெளியிட்ட படங்களிலும், ஜெயா டிவியில் வெளியான காட்சிகளிலும், விஜயகாந்த் நாக்கைக் கடித்துக் கொண்டு கோபப்படுவதை மட்டும் காட்டுகிறார்கள் ஆனால், அதிமுக அடிமைகள் செய்த கலவரத்தைக் காட்டவில்லை.
ஜெயலலிதா கண் முன்பாகவே, தரை டிக்கெட்டில் படம் பார்ப்பவர்கள் போல, ஏகவசனத்தில் விஜயகாந்தைப் பேசத் தொடங்கிய உடனேயே ஜெயலலிதா அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? பால் விலை உயர்வைப் பற்றி பேசியதற்கு, பால்வளத்துறை அமைச்சர், எங்களால்தான் அவைக்கு வந்தீர்கள் என்று பேசிய உடனேயே ஜெயலலிதா அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? ஏகவசனத்தில், அவனே, இவனே என்று கூக்குரலிடும் அதிமுகவினரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே ஜெயலலிதா ? இப்படி கூக்குரல் இட்டவர்களில், மன்னார்குடி மாபியாவுக்கு நெருக்கம் என்று அறியப்படும், கலைராஜன், சின்னசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரே முன்னணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்ற ஏக்கத்தில், அவர்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவினர்.
விஜயகாந்த்தும், இன்னும் பக்குவப்பட வேண்டும். அவருக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு மூத்த அரசியல்வாதி. நிறைந்த அனுபவம் மிக்கவர். அவரின் வழிகாட்டுதலோடு, விஜயகாந்தும் பக்குவப்பட வேண்டும். இடதுசாரிகளோடு சேர்ந்து, விஜயகாந்த் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே, பெரும்பாலான மக்களின் எதிர்ப்பார்ப்பு.
தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவுக்கு அமோக வெற்றி கொடுத்ததற்கு காரணம், திமுக மீது அவர்களின் கோபம் தணியவில்லை என்பதே. இந்த உணர்வு இப்படியே இருக்குமா என்று சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தது போலவே, பாராளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வென்று விடலாம் என்று ஜெயலலிதா நினைத்தாரேயானால், அது தப்புத்தாளங்கள் தான்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்