நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday, 16 February 2014

100 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஈரோடு - பழநி ரயில் திட்டம்: 49 ஓ-வை அழுத்தத் தயாராகும் 3 மாவட்டங்கள்

தாராபுரம் - பழநி ரயில் தடத்தில் உள்ள கிராமங்களை இப்போதே தேர்தல் பிரச்சாரம் களைகட்டிவிட்டது. தேர்தலை புறக்கணிக்கும் 49ஓவை அழுத்தச் சொல்லி, வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், இரவு நேர திண்ணைப் பிரச்சாரங்கள் என களைக்கட்டத்தொடங்கிவிட்டன. ரயில்வே மக்கள் பணிச் சங்கமும், வாக்காளர் பேரவையும் இணைந்து தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளன.
100 ஆண்டு திட்டம்
ஈரோடு- பழநி ரயில் திட்டம் 1915ல் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 1952ல் தாராபுரம் கொளத்துப்பாளையம் மறைந்த கே.என்.லிங்கசாமி காலத்தில் தொடங்கிய போராட்டம் தற்போது வரை நிறைவேறவில்லை. கிட்டத்தட்ட ஒரு ரயில் பாதை திட்டத்திற்காக இத்தனை ஆண்டுகாலம் போராடிய மக்கள் வேறு யாரும் இருக்க முடியாது. 100 ஆண்டுகளை நெருங்கும் வேளையில் 3 தலைமுறைகளை கடந்த மிக நீண்ட நெடியபோராட்டம் இது.
இத் திட்டமானது, ஈங்கூர், சென்னிமலை, காங்கயம், தாராபுரம், தாசநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளடக்கிய 91 கி.மீ பாதையாகும். இப் பகுதியில், சர்வே பணிகள் முடிக்கப்பட்டு, நில ஆர்ஜிதப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. மாநில அரசு நில ஆர்ஜித பணிகளை துரிதமாக முடித்து மத்திய அரசிடம் அளித்திருந்தால், இந் நேரம் இந்தப் பாதையில் ரயில்கள் சென்று கொண்டிருக்கும் என்கின்றனர் ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தினர்.
திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கியத் திட்டம் என்பதால் இப் பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், 2010ல் இறுதி சர்வே முடிவடையும் தருவாயில், காங்கயம், சென்னிமலை, பகுதியில் நிலம் சர்வே பணிகளை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தொழில் பகுதி
காங்கயம் பகுதியில் ஜமுக்காளம், கைலி, கைத்தறி தொழில்களும் தேங்காய்பருப்பு தொழிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தாராபுரம் பகுதியில் விவசாயமும், நூற்றுக்கணக்கில் அரிசி ஆலைகளும் உள்ளன. இப் பகுதியிலிருந்து பழநி மலைக்குச் செல்லும் முருக பக்தர்கள் ஏராளம். இவர்களுக்கு ஈரோடு -பழநி ரயில் திட்டம் ஒரு வரப்பிரசாதம். காங்கயம் பகுதி கிரானைட் மற்றும் கல், ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ரயில் போக்குவரத்தின் வருமானம் பெருமளவு அதிகரிக்கும்.
திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, மிகவும் வேகமாக சர்வே பணிகள் நடைபெற்றன. ரயில் பாதையில், எங்கு பாலம் வர வேண்டும்? நிலையங்கள் எங்கெங்கு வர வேண்டும் என நில அளவை முயற்சிகள் நடந்தன. இப்போது வருமானம் இல்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. பல ஆண்டு மக்கள் கோரிக்கையை புறக்கணிப்பது சரியல்ல;
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கி முயற்சி எடுத்த எம்.பி கார்வேந்தனுக்கு பாராட்டு விழாவும் நடத்தினோம். அவரும் ரயில் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி இது தொடர்பாக நடைபயணம் மேற்கொண்டார். இத் திட்டத்தால் நேரிடையாக 7 லட்சம் பேரும், மறைமுகமாக 25 லட்சம் பேரும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பின் இத்தனை எம்பிக்கள் கிடைத்தும் ஒரு திட்டத்தை நிறைவேற்ற ஏன் இவ்வளவு தயக்கம் என கேள்வி எழுப்புகிறார் ஈரோடு தாராபுரம் பழநி ரயில்வே மக்கள் பணிச் சங்க பொதுச் செயலாளர் லிங்கம் சின்னச்சாமி.
பிரதமரிடம் வலியுறுத்தல்
இந்த ரயில் திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்த முன்னாள் எம் பி கார்வேந்தன் கூறியது:
சாம்ராஜ் நகர் முதல் பழநி வரை 2004-2005 ஆண்டு திட்டம் போடப்பட்டது. பயணிகள் தவிர சரக்குப் போக்குவரத்திற்கும் பிரதானமான பாதை தான் இது. 400 அரிசி ஆலைகள் இப் பகுதியில் உள்ளன. இதில் வட மாநிலத்திலிருந்து நெல்லாக கொண்டு வரப்பட்டு அரிசியாக இங்கிருந்து வட மாநிலத்துக்கு செல்கிறது. 2005-2006ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
திட்டக்குழு, ரூ.284 கோடி இந்த திட்டத்திற்கு அறிவித்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஈரோடு பழநி பாதயாத்திரை பயணம் மேற்கொண்டோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இது தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்துள்ளேன். மத்திய அரசு நிதியோடு மாநில அரசு சற்று நிதி ஒதுக்கினால் இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்கிற ஒரு கருத்தும் இதற்காக போராடுபவர்கள் மத்தியில் உள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற, தொகுதி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து அவற்றை தீர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் சொல்லி வருகிறார். ஆனால், இப் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பது தொடர்பான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
இந்த 3 மாவட்ட மக்களின் 100 ஆண்டு பிரச்சினையை சம்பந்தபட்டவர்களுக்கு யார் புரிய வைப்பது?