நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Tuesday, 11 February 2014

ஒவ்வொரு இந்தியனும் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும்படிச் செய்வேன்

மெக்காலே இந்தியாவில் கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்தை மலரச் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் கல்வியை அறிமுகப்படுத்தியபோது ஒரு விஷயத்தைச் சூளுரைத்தான்: ஒவ்வொரு இந்துவையும் இந்து என்று சொல்வதற்குத் தலைகுனிய வைப்பேன்.


ஒருவகையில் இதில் அவனது கூட்டம் வெற்றியை அடைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பல்வேறு பழங்குடிகளை அடியோடு அழித்து ஒற்றைத்தன்மை கொண்ட பூதாகரமான அமைப்பாக வளர்ந்த கிறிஸ்தவ மதத்தைவிட பழங்குடி அம்சத்தைக் கைவிடாமல் பரஸ்பரப் புரிதலுடன் வாழ்ந்து வந்த பன்முக, மையம் அழிந்த இந்து சாதிய அமைப்பு மிகவும் இழிவானது என்ற எண்ணமானது இந்துக்கள் குறிப்பாக அறிவு சார் வர்க்கத்தின் மத்தியிலேயே வெகு அழுத்தமாக வேரூன்றிவிட்டிருக்கிறது.
ஆனால், இன்னொருவகையில் பார்த்தால் மெக்காலே அன்கோவுக்கு இதில் பாதி வெற்றிதான் கிடைத்திருக்கிறது என்று சொல்லவேண்டும். ஏனென்றால், எந்த ஆங்கிலேய கிறிஸ்தவ சக்திகள் இந்து சாதிகளை ஒழிக்க நினைத்தனவோ அவையே அந்த சாதிகளுக்கு இந்தியா என்ற நவீன ஜனநாயக அமைப்பைத் தந்துவிட்டுப் போயிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்து என்பதற்கு வெட்கப்படும் சாதி சார்ந்த மக்கள் இந்தியர்கள் என்ற அரசியல் அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். இது சதித்திட்டம் தீட்டியவர்களே எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை. டைனசர்கள் அழிந்துபட அவற்றிடமிருந்து உயிர் தப்ப ஓடிய உயிரினங்களின் முன்னங்கால்கள் சிறகுகளாகி பறவைகளாகச் சுதந்தர வானில் இன்னும் பறந்து கொண்டிருப்பதுபோல் அடிமைப்படுத்தப்பட்ட பாரதம் அஹிம்சையின் சம்மட்டியால் சங்கிலிகளை உடைத்தபடி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது.
ஆனால், உலகம் சதியாலானது. சதி வலைகள் தொடர்ந்து பின்னப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
சுதந்தரம் கிடைத்த காலகட்டத்தில், இந்தியா வெகு சீக்கிரமே துண்டு துண்டாக உடைந்துவிடும் என்பதுதான் ஒட்டுமொத்த உலகின் எண்ணமாகவே இருந்திருக்கிறது. அது நடக்கவில்லை. அதனால், நேற்றைய உலகைக் கட்டியாண்ட பிரிட்டிஷ் (ஐரோப்பிய) கிறிஸ்தவ சக்திகளுக்குப் பதிலாக இன்றைய அமெரிக்க-ஐரோப்பிய கிறிஸ்தவ சக்திகள் இந்தியா மீது இரண்டாம் கட்டத் தாக்குதலை ஆரம்பித்திருக்கின்றன. காலனியத்துக்கு மாற்றாக ’உலகமயமாக்கம்’. கடந்த முறை மெக்காலே. இந்த முறை சோனியா காந்தி. இன்றைய லட்சியம்: ஒவ்வொரு இந்தியனும் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும்படிச் செய்வேன் என்பதுதான்.
இந்த சதியானது இன்று நான்கு மாபெரும் சக்திகளின் மூலமாக அரங்கேற்றப்பட்டுவருகிறது. முதலாவதாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி. இன்னொன்று எதிர்கட்சியான இந்துத்துவ பி.ஜே.பி. மூன்றாவதாக கம்யூனிஸ-மாவோயிஸக் கட்சிகள். நான்காவதாக பிராந்தியக் கட்சிகள்.
காங்கிரஸ் கட்சியானது இன்று ஐரோப்பிய கிறிஸ்தவ தலைமைப்பீடமான இத்தாலியின் பிரதிநிதியால் ஆளப்படுகிறது. சஞ்சய் காந்தியின் கொலை, இந்திரா காந்தியின் கொலை, ராஜீவ் காந்தியின் கொலை என மூன்று கொடூர மரணங்களின் மூலம் இந்திய ஆட்சியானது சோனியாவின் கைகளுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. ஒரு குற்றம் நடந்ததென்றால், அதனால் அதிக பலன் யாருக்குக் கிடைத்திருக்கிறதோ அவர்களே அதைச் செய்திருக்க வாய்ப்பு அதிகம் என்பது குற்றவியலின் பாலபாடம்.
இந்திராவின் மரணம், ராஜீவின் மரணம் எல்லாம் அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளினால் நிகழ்ந்தது என்ற வெளிப்படையான காரணம் ஒன்று அனைவரும் நம்பும் வகையில் பொதுவெளியில் வலுவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாகச் சொல்லப்படும் எதுவுமே பொய்யான குற்றச்சாட்டாகவே பார்க்கப்படும். யாராவது அது பற்றிய சந்தேகத்தை எழுப்பினால் கோமாளியாகவோ, அடிப்படைவாதியாகவோ முத்திரை குத்தி ஒட்டுமொத்த சமூகமும் எளிதில் புறந்தள்ளிவிடும். இந்த உண்மைகளுக்கு விக்கிலீக்ஸ் போல் ஏதாவது உள்வட்ட ஆதாரம் கிடைத்தால்கூட ஊடகங்களோ மக்களோ அதை நம்பவே மாட்டார்கள் என்னும் அளவுக்கு அந்தச் சதித்திட்டம் துல்லியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அப்படியாக மேற்கத்திய ஏஜெண்ட் சோனியாவின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் எளிதில் கிடைத்துவிட்டிருக்கிறது.
ஏஜெண்ட் என்பது தவறான வார்த்தைதான். உண்மையில் மேற்கத்திய உளவாளி என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும் (கோஸ்ட் ரைட்டர் என்றொரு படம். அதில் பிரிட்டிஷ் பிரதமர் ஒரு அமெரிக்க உளவாளி என்பதுபோல் கதை செல்லும். ஆனால், உண்மையில் அந்த பிரதமரின் மனைவிதான் அமெரிக்க உளவாளியாக இருந்திருப்பார். இந்தியச் சூழலை அடிப்படையாகக் கொண்ட உண்மை நிகழ்வு அது. ஒவ்வொரு நாட்டு உளவுப் பிரிவில் இருப்பவர்களுடன் கலந்து பேசி உண்மை அடையாளங்களை மாற்றி அமைத்து நாவல்களாக,  திரைப்படங்களாக எடுப்பதுண்டு. இந்தியாவில் பின்னப்படும் சதி வலைகளை மாற்றியமைத்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம் சால்ட். அதில் அமெரிக்காவை அழிக்க ரஷ்யாவால் அனுப்பப்பட்ட உளவாளியான நாயகி கடைசியில் அமெரிக்காவைக் காப்பாற்றுபவராக மாறுவார். வில்லன்கள் திருந்துவதும் தண்டிக்கப்படுவதும் திரைப்படங்களில் மட்டும்தானே சாத்தியம்).
சோனியா அன்கோவின் ஹிடன் அஜெண்டா வெகு தெளிவானது. இந்தியாவை அழி.
123 அணு சக்தி ஒப்பந்தம், கனிம வளங்களைச் சூறையாட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி, ஊழல் மூலம் அரசு இயந்திரத்தை முடக்குதல், அரசுக்குச் சேரவேண்டிய வருவாயை தனியாருக்குத் தாரைவார்த்துக்கொடுப்பது, விவசாயத்தை நசித்தல், இந்து, இந்திய அடையாளத்தை அழித்தல் என வெகு தெளிவாக நாசகாரச் செயலை வெகு நளினமாகச் செய்துவருகிறார். காஷ்மீர், வட கிழக்கு போன்ற பகுதிகளில் அதிருப்தி குழுக்களை வளரவிடுதல் கூடவே அவற்றை ராணுவம்கொண்டு அடக்குதல் என சதுரங்கத்தின் இருபக்கத்திலும் மேற்கத்திய உலகமே அமர்ந்துகொண்டு காய்களை உருட்டி விளையாடிவருகிறது. ஆட்டக்களமாக இந்தியாவும் வெட்டப்படும் உயிர்களாக இந்தியர்களுமாக இருக்கும் வன்முறைச் சதுரங்கம்.
சோனியாவுக்கு அடுத்ததாக, அவருடைய மகள் பிரியங்கா ராபர்ட் முழு அளவில் மூளைச் சலவை செய்யப்பட்டுத் தயாராக இருக்கிறார். இளவரசர் ராகுல்காந்திதான் அரியணைக்குத் தயார்படுத்தப்படுகிறார் என்றாலும், எப்படி அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய லேடி சாணக்கியாவின் கைகளுக்கு தானாகவே அதிகாரம் போய்ச்சேர்ந்ததோ அதுபோலவே திருமதி ராபர்ட் வசமும் அதிகாரம் போய்ச்சேரும். அல்லது ராகுல்ஜிக்கு ஒரு இந்திய எதிர்ப்பு மனைவி வந்து சேருவார். எப்படியானாலும் இந்திய எதிர்ப்புச் செயல்பாடுகள் இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு எந்தவிதத் தடையுமின்றி நடக்கவே செய்யும்.
அரசியலுக்கு அடுத்ததாக, இந்திய பொருளாதாரக் கட்டுப்பாடும் மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க கைகளில் தஞ்சம் புகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. ஊடகங்களில் ஆரம்பித்து உள்ளூர் மளிகைக்கடைவரை அவர்களின் பிரதிநிதிகளே இனி ஆளப்போகிறார்கள். மெள்ள மெள்ள மேற்கத்திய மதிப்பீடுகள் அனைத்து மட்டங்களிலும் திணிக்கப்படும். வென்ச்சர் கேபிடல் என்பது சமீபகாலமாக அனைத்துத் தளங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை உண்மையில் அட்வென்ச்சர் கேப்பிடல் என்பதற்கு பதிலாக ரகசியத் திட்ட முதலீடு என்றுதான் சொல்லவேண்டும். சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன?
விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்களால் தொலைகாட்சியில் என்ன தொடர் வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். வென்ச்சர் கேப்பிடலிஸ்ட்களால் பத்திரிகைகளிலும் திரைப்படங்களிலும் என்னவிதமான கருத்துகள் இடம்பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். இப்போதே சுட்டி டிவி போன்றவற்றில் இடம்பெறும் தொடர்களில் மேற்கத்திய கதாபாத்திரங்களே இடம்பெற்றுவருகின்றன. அந்தத் தலைமுறை இளைஞர்களாக ஆகும்போது திரைப்படங்கள், தொலைகாட்சித் தொடர்களில் மேற்கத்திய கலாசாரம் புகுத்தப்படும். இப்போதே பெரு நிறுவனங்களின் விளம்பரங்களில் மேற்கத்திய கிறிஸ்தவ சார்வு கணிசமான அளவில் இடம்பெற்றுவருவதை ஒருவர் பார்க்க முடியும். திரைப்படங்களில் கிறிஸ்தவ அடையாளங்கள்/கதாபாத்திரங்களின் அதிகரிப்பு, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் பெருக்கம் என கர்த்தரின் சாம்ராஜ்ஜியத்துக்கான களப்பணிகள் வெகு நுட்பமாக, வெகு அழுத்தமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பொருளாதார நிறுவனங்கள் முழுவதுமாக மேற்கத்தியர்களின் கைகளுக்குப் போகும்போது இந்தியா முழுவதுமாக ரட்சிக்கப்பட்டுவிடும்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் கைக்கு வருவதற்கு ஏதுவாக மதரீதியான முன் தயாரிப்புப் பணிகள் இரண்டு நூற்றாண்டுகளாகவே நடந்துவந்திருக்கின்றன. இந்து மதத்தின் சாதி அம்சத்தை மிகைப்படுத்தி கருத்தியல் தளத்தில் வெறுப்பை ஏற்கெனவே ஆழமாக ஊன்றியாகிவிட்டது. இந்திய அரசியல் அதிகாரமும் பொருளாதாரக் கட்டுப்பாடும் மேற்கத்திய நிறுவனங்களின் கைக்குள் வந்ததும் தேவனின் மகிமையும் விஷம்போல சரசரவென ஏற ஆரம்பிக்கும்.
இந்த இடத்தில் ஒருவிஷயத்தைத் தெளிவுபடுத்துவது நல்லது. கிறிஸ்தவத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று இயேசுவின் கிறிஸ்தவம். இன்னொன்று சர்ச்சின் கிறிஸ்தவம். அதாவது சாத்தானின் கிறிஸ்தவம். ஒருவகையில் இயேசுவே சர்ச் கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்தான். ஆனால், சர்ச்சுகள் வெகு அழகாக அவரை உள்வாங்கிக்கொண்டுவிட்டன. சாத்தான், தெய்வத்தின் முகமூடியை அணிந்துகொண்டுவிட்டது. கிறிஸ்தவத்தின் பரவல் என்பது இந்து இந்திய அம்சங்களை அழித்து மேற்கத்தியமயமாக்குதல் என்ற அளவில் மட்டுமே இங்கு நடைபெறுகிறது. உண்மையான கிறிஸ்தவம் என்பது வந்துசேர்வதே இல்லை.
0
இது ஒருபக்கம் என்றால், இந்த மேற்கத்திய போலி கிறிஸ்தவத்தின் சதியை எதிர்கொள்ளவேண்டிய பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற உள்நாட்டு அரசியல்-மத அமைப்புகள், சோனியாவின் காங்கிரஸைவிடப் படுமோசமாக இந்தியாவை அழிவுப்பாதையில் தள்ளிவிடுபவையாக இருக்கின்றன. சுதேசி மற்றும் இந்து-இந்திய மேம்பாடுதான் அவற்றின் கோஷங்கள். ஆனால், சுதேசித் தொழில்கள், சுதேசித் தொழில்நுட்பம், சுதேசி மதிப்பீடுகளைப் பாதுகாத்து காலத்துக்கு ஏற்ப வளர்த்தெடுப்பதற்கு பதிலாக பி.ஜே.பி. அந்நிய அடிமைகளாக ஆகிவிட்டிருக்கிறது. ஒருவகையில் சோனியா காந்தி மூலம் காங்கிரஸுக்குள் தன் பிடியை பலப்படுத்துவதற்கு முன் மேற்கத்திய சக்திகள் பி.ஜே.பி.யில் தங்கள் கரத்தை வலுப்படுத்தியிருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது. கொக்ககோலாவை ஆதரித்து முதலில் பேசியது பி.ஜே.பி.யின் சுஷ்மா ஸ்வராஜ் என்ற ஒன்றே அந்தக் கட்சியின் சார்புநிலையைப் புரிந்துகொள்ளப் போதுமானது. புத்தரை இரண்டாவது தடவை சிரிக்க வைத்ததில் ஆரம்பித்து அணு உலைகளுக்கு ஆதரவு தருதல், பன்னாட்டு நிறுவனங்கள் கையில் இந்திய வளங்களை ஒப்படைத்தல், விவசாயத்தைப் புறக்கணித்தல், சுதேசி இயக்கத்தை முடக்குதல் என பி.ஜே.பி. கட்சியானது காங்கிரஸின் நகல் போலவே இருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட பி.ஜே.பி.யால் ஏற்படவிருக்கும் அபாயம் வேறொன்று இருக்கிறது.
அதுதான் அதன் பிற மத வெறுப்பு. குஜராத்தில் நடந்த படுகொலை, ஒரிஸ்ஸா தாக்குதல் போன்றவை பி.ஜே.பி.யின் பிழையான முன்னெடுப்புக்கான மிகச் சிறந்த உதாரணங்கள். இந்து மதத்தைக் காப்பது என்றால் இஸ்லாமியரையும் கிறிஸ்தவர்களையும் கொல்வது என்ற அதன் புரிதல் படு கொடூரமானது. உண்மையில் அதன்மூலம் அவர்கள் இந்தியர்களைத்தான் கொல்கிறார்கள், போப்பாண்டவரின் கைக்கூலியாகத்தான் நடந்துகொள்கிறார்கள் என்ற அரசியல் புரிதல்கூட அவர்களுக்கு இல்லை. அனைவரையும் அணைத்துச் செல்லும் இந்துவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், வெறுப்பை உமிழும் இந்துவை முன்னிறுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், இந்துக்களுக்குமே பெரும் நாசத்தையே தேடித்தருகிறார்கள்.
செப்-11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க சக்திகள் தீட்டிய சதியின் ஓர் அங்கமே இந்தியாவில் வலதுசாரி இந்துத்துவ சக்திகளின் அடிப்படைவாத வளர்ச்சிகள் எல்லாம். அரபு நாடுகளிலும் ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் அமெரிக்கா வரை போய் தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க அவர்கள் வகுத்த சதித் திட்டங்களின் ஓர் அங்கமே இந்தியாவை (அடிப்படைவாத) இந்து இந்தியாவாக ஆக்குவது. அதன் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் முதல் இலக்காக இந்தியாவை ஆக்குவது.
மோடியின் மேல் நோக்கிய அதி வேக வளர்ச்சியானது அவருடைய நிர்வாக, அரசியல் சாதுரியத்தினால் மட்டுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. ஈழ விஷயத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கும் பி.ஜே.பி.யின் நிலைப்பாட்டுக்கும் எந்தவிதப் பெரிய வித்தியாசமும் இல்லாத நிலையிலும் வைகோ போன்ற இந்திய விரோத சக்திகள் மோடியை ஆதரிப்பதன் மறைமுக நோக்கம் இந்திய அழிவுக்கு அது வழிவகுக்கும் என்பதுதான். மோடி நிச்சயம் இந்தியாவை வலிமையான தேசமாக ஆக்கும் நல்லெண்ணத்தைக் கொண்டவராகவே இருக்கக்கூடும். ஆனால், அவரைச் சொல்லிச் சொல்லியே இந்திய இந்து விரோத சக்திகளை முடுக்கிவிடுவது எளிது. ஒருகட்டத்தில் மோடியும் வேறு வழியின்றி இந்து ராஷ்டிரமாகவாவது இந்தியா ஆகட்டும் என்ற முடிவை எடுக்கவேண்டிய நிலை வரலாம். அப்படியாக இலங்கையின் சரித்திரம் இந்தியாவிலும் எழுதப்படும் என்றால் அதுபோல் அழிவு வேறெதுவும் இருக்க முடியாது.
காங்கிரஸ், பி.ஜே.பி என்ற இந்த இரு அதிகாரமையங்களுக்கு மாற்றாக இருக்க வேண்டிய சக்திகளாக கம்யூனிஸ்ட்களையும் பிராந்திய கட்சிகளையும் சொல்லலாம்.
அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ஆக்கபூர்வமான சக்தியாக இருக்க முடியும். ஆனால், ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்த பிரிவுகள் அரசு, அதிகார அலுவலகங்களின் முன் கோஷங்கள் போடுவதிலும், ஊடகங்களில் தமது முதலாளிகள் அனுமதிக்கும் அளவுக்கான புரட்சி முழக்கங்களை முழங்குவதிலும், பொது இடங்களில் உண்டியல் குலுக்குவதிலுமே முற்போக்கு ஆர்கஸத்தை அடைபவர்களாக இருக்கிறார்கள். வன்முறைப் பாதையில் போகும் நக்சல்,மாவோயிஸ பிரிவினரோ மன்மோகன்சிங்கையோ, சோனியாவையோ, சிதம்பரத்தையோ, மோடியையோ கடத்திச் சென்று பேரம் பேசுவதற்குப் பதிலாக பொட்டு வெடி துப்பாக்கிகளைவிட சற்றே மேம்பட்ட துப்பாகிகளைக் கையில் வைத்துக்கொண்டு அடுத்த பஞ்சப்படி பயணப்படி உயர்வை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் சிரிப்பு போலீஸ்களைக் கடத்திச் சென்றும் சுட்டுக்கொன்றும் வீரத்தைக் காட்டிவருகிறார்கள். இந்த வன்முறை இயக்கங்களின் நோக்கம் உள் நாட்டில் கலகங்களை உருவாக்கி இந்திய ஒற்றுமையைக் குலைப்பதுதான். அவர்கள் சொல்லிக் கொள்வதுபோல் பாட்டாளி வர்க்க விடுதலையெல்லாம் இல்லை. ஒருவகையில் தங்கள் நாடுகளில் இவர்களை எதிரிகளாக ஒடுக்கும் மேற்கத்திய உலகம் இந்தியாவைக் குலைக்க உதவும் என்ற வகையில் இவற்றுக்கு மறைமுக உதவிகளைத் தந்துவருகின்றன. இந்திய சீன மோதலை உருவாக்குவதன் மூலம் இரண்டையும் கட்டுக்குள் வைக்கும் பணியையும் இதனூடே ஆரம்பித்திருக்கிறார்கள்.
உண்மையில் முதலாளித்துவ – கிறிஸ்தவ சக்திகளை எதிர்க்கும் போரில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பி.ஜே.பியும் ஓரணியில் திரண்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் அரசியல் கட்சியாக  ஆரம்பித்த காலத்தில் இருந்தே எதிரிகளாகவே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். உலக அளவில் கம்யூனிஸ அரசுகள் செய்த தவறுகளை எல்லாம் சொல்லிச் சொல்லி இந்துத்துவ வலதுசாரி சக்திகள் இந்திய கம்யூனிஸ்ட்களை வெறுத்து ஒதுக்குகின்றன. அதைப்போலவே, ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டி காட்டுவதையே லட்சியமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் சமீபத்திய புரட்சிச் செயல்பாடாக மோடி அரசு செய்த தவறுகளை மிகைப்படுத்தி இந்துத்துவ சக்திகளை அறவே வெறுக்கும் செயலைச் செய்து வருகிறார்கள். ஆனால், இப்படிச் செயல்படுவதன் மூலம் இந்த இரண்டு சக்திகளின் பொது எதிரியான கிறிஸ்தவ – முதலாளித்துவ சக்திகளின் கைப்பாவையாகவே இருவரும் தமக்குள் சண்டையிட்டு மடிந்துவருகிறார்கள். பி.ஜே.பியும் கம்யூனிஸ்ட்களும் சுதேசியையும் நாட்டார் இந்துப் பண்பாட்டையும் தங்கள் கொள்கைகளாக இணைந்து முன்னெடுப்பது ஒன்றுதான் கிறிஸ்தவ – முதலாளித்துவ சக்திகளை வீழ்த்த ஒரே வழி. ஆனால், அந்த இரண்டு பொம்மைகளையும் ஆட்டுவிக்கும் சூட்சுமக் கயிறு இத்தாலியில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் அல்லவா நீளுகின்றன.
இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் நான்காவது சதி பிராந்தியக் கட்சிகளை மொழிவாரி தேசியத்தை நோக்கி விரட்டுவது. ஆந்திராவில் தெலுங்கானா மோதலாக அது ஊதிப் பெருக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, காஷ்மீரிலும், வட இந்திய மாநிலங்களிலும் இந்தத் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கருத்தியல் ரீதியில் இந்து – இந்தியா மீது மிகப் பெரிய வெறுப்பு ஆறு வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த குறுந் தேசிய சக்திகள் எல்லாம் பத்திருபது ஆண்டுகளாக மேலும் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. அதிலும் தமிழகத்தில் இந்த மாற்று சக்திகள் இந்திய வெறுப்பை கண்மூடித்தனமாக முன்வைப்பவையாக ஆகிவருகின்றன. ஈழப் பிரச்னையில் சிங்கள அரசையும் விடுதலைப்புலிகளையும் விட்டுவிட்டு இந்தியாவே எல்லாவற்றுக்கும் காரணம் என வெறுப்பை உமிழ்ந்துவருகின்றன. சோனியா காந்தி என்ற ஒற்றை உளவாளியின் துரோகச் செயல்களுக்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் வெறுத்து அறம்பாடும் பார்ட்டைம் பத்தினிகளும் இந்தியாவை 2047க்குள் உடைத்து சின்னாபின்னமாக்குவேன் என்று முழங்கும் வெறி நாய்களும் உலவும் பூமியாகத் தமிழகம் மாறிவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இதுவரையும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல்தான் இருந்துவருகிறது. ஆனால், காவிரி, முல்லைப்பெரியாறு, கூடங்குளம்போன்ற பல கண்ணி வெடிகள் என்று வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதுபோல் புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று சட்டம் ஒழுங்கு பிரச்னையாகப் பெரிதாக்கப்பட்டால் இறையாண்மையைக் காக்கும் நோக்கில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அன்று இந்திய வெறுப்பை உமிழும் டான்குயிக்சாட்கள் மாவீரர்களாக ஆகிவிடுவார்கள். ஏற்கெனவே, பாலசந்திரன் படுகொலையை முன்வைத்து மாணவ சமுதாயத்தின் மூலம் நாடி பார்த்துவிட்டிருக்கிறார்கள். மெள்ள  ஒட்டுமொத்த தமிழகமும் அவர்கள் பின்னால் அணி திரள வைக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில் அதிருப்திக் குழுக்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயற்சி செய்வது எப்படி தீவிரவாதத்தை மேலும் பலப்படுத்திவருகிறதோ அதேபோலவே இங்கும் நிகழும்.
அதோடு சமீபகாலமாக புதியதொரு ஆபத்து உருவெடுத்திருக்கிறது. ஜெயலலிதா பிரதமராக ஆசைப்படத் தொடங்கியிருக்கிறார். கடந்த ஆட்சி காலத்தில் எதிர்கட்சியாக உருப்படியாக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டிராத ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத் தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி என்பது மக்களின் வாக்கினால் கிடைத்த ஒன்றாக நம்புவது மிகவும் சிரமமே. மிகப் பெரிய சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக அவர் முன்னுக்குக் கொண்டுவரப்படுகிறார். 30-35 இடங்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குக் இடைத்துவிட்டால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவில் அவருடைய ஆசை நிறைவேறக்கூடச் செய்யலாம். என்ன, பிராயச்சித்தமாக, பி.ஜே.பியின் பெரிய தலை ஒன்றைப் பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைக்க வேண்டியிருக்கும். எவ்வளவோ செய்த அவர் இதைகூட செய்யமாட்டாரா என்ன? அதைவிட அவருடைய திமிரானது ஏற்கெனவே சீர் கெட்டுக் கிடக்கும் அண்டை நாடுகளுடனான உறவுகளை மேலும் மோசமாக்கும். பிராந்தியக் கட்சிகள் மூலமான அழிவு என்பது அப்படியானதாக அரங்கேறும்.
இந்தியாவில் இப்போது துடிப்புடன் இருக்கும் நான்கு அரசியல் மையங்களும் இந்திய விரோத சக்திகளால் ஆட்டுவிக்கப்படுபவையாக இருக்கின்றன. சோனியாவின் காங்கிரஸ் மறைமுகமாகவும் பிஜேபி தன்னையறியாமலும் கம்யூனிஸ, மாவோயிஸ, பிராந்திய அதிருப்திக் குழுக்கள் வெளிப்படையாகவும் இயங்கிவருகின்றன.
இந்தியா மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் மலையாலும் சூழப்பட்டிருக்கிறது என்று பாடப்புத்தகங்களில் படித்துவருகிறோம். உண்மையில் இந்தியா நான்கு பக்கமும் சதியால் சூழப்பட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு செயல்பட்டாக வேண்டும்.
forum-b-23-9-20119/11 தாக்குதல் தொடர்பாக ஒரு டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது பலருக்கும் தெரிந்திருக்கும். உண்மையில் விமானங்கள் மோதி வெடித்ததால் அந்த கட்டடங்கள் இடிந்துவிழவில்லை; அந்த பிரமாண்ட கட்டடத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிறு வெடிகுண்டுகளைப் பொருத்தி ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள் என்று அதில் சொல்லியிருந்தார்கள். அந்த விபத்து நடப்பதற்கு சில வாரங்கள் முன்பாக நடந்த மின்சார மராமத்து வேலைகளையும் அந்த ஆவணப்படம் சந்தேகக் கண்கொண்டு பார்த்திருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அதுபோன்ற சிறிய கண்ணிவெடிகள் பொருத்தப்படுவருகின்றன. நாம் சுதாரித்துக்கொள்ளவில்லையென்றால் இன்னொரு 9/11 இந்தியாவுக்கும் நடந்துவிடும். அது இந்தியாவுக்கும் நல்லதல்ல. இந்திய மாநிலங்களுக்கும் நல்லதல்ல.
சுதந்தரப் போராட்ட கால காங்கிரஸின் சிறுபான்மை நலன் சார்ந்த அணுகுமுறை, பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸின் சுதேசி நலன் சார்ந்த அணுகுமுறை, கம்யூனிஸ மாவோயிஸ்ட்களின் பாட்டாளை வர்க்க நலன் சார்ந்த அணுகுமுறை, பிராந்திய கட்சிகளின் தேசிய-பிராந்திய நலன் சார்ந்த அணுகுமுறை இவையே இன்றைய தேவை. இந்த அம்சங்கள் எல்லாம் ஒருங்கே கொண்ட ஒரு தத்துவம் இதே மண்ணில் இதற்கு முன்பாக ஒருவரால் முன்னெடுக்கவும் பட்டிருந்தது. 1948 –ல் இதே நாளில்தான் அவர் கொல்லப்பட்டார். அவருடைய இரண்டாம் வருகை மிகவும் அவசியமானதாகிவிட்டிருக்கிறது. அவர் மரித்த சொற்ப காலத்துக்குள்ளாகவே இப்படியான ஒரு நிலை ஏற்பட்டது துரதிஷ்டமே. என்ன செய்ய… இருந்த ஒற்றை அகல் விளக்கையும் அணைத்துவிட்டவர்கள் இருளில்தானே இருந்தாக வேண்டியிருக்கும். ஆனால், அந்த அஹிம்சையின் திரியில் சிறு நெருப்பைப் படர விட்டால் போதும். அது பேரொளியுடன் துலங்க ஆரம்பித்துவிடும். ஏனெனில், இந்திய அகலில் எண்ணெய் இன்றும் வற்றவில்லை.