நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday, 12 February 2014

சிரியாவின் வறட்சியைப் போக்க உதவிகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வருந்த நேரிடும்

1970-களில் மத்தியக் கிழக்கு நாடுகள்பற்றிய நவீன வரலாற்றுப் பாடத்தில்தான் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். அந்தப் பாடங்களில் சுற்றுச்சூழல் மாசுகுறித்தோ, பருவகால மாறுதல்கள்குறித்தோ எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் படிக்கவேயில்லை என்று உங்களுக்கு உத்தரவாதமாகச் சொல்லுவேன். ஆனால், இப்போது பருவமாறுதல், சுற்றுச்சூழல், மக்கள்தொகை ஆய்வுகள் ஆகியவற்றைக் கணக்கில்கொள்ளாமல் அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விழிப்புணர்வு எழுச்சிகளை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது.
வறட்சியும் கிளர்ச்சியும்
சுற்றுச்சூழல் பிரச்சினையால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் எப்படி அரசியல் கிளர்ச்சியில் போய் முடியப்போகின்றன என்பதை விவரிக்கும் அரசியல் தந்தி ஒன்றை ‘விக்கிலீக்ஸ்’ அம்பலப்படுத்தியிருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கைப்பற்றியிருக்கிறார்கள்.
2008 நவம்பர் 8-ல் டமாஸ்கஸில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அந்தத் தந்தி அனுப்பப்பட்டிருக்கிறது. 2006 முதல் 2010 வரையில் சிரியாவில் கடும் வறட்சி நிலவியது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு - வேளாண்மைத் துறையில் சிரியாவின் பிரதிநிதியாக இருந்த அப்துல்லா பின் யெஹியா, ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் சிரியாவுக்கு உதவிகளைக் கேட்டார்.
அது தொடர்பாகச் சில முக்கியமான அம்சங்கள்:
மனிதாபிமான உதவிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், செப்டம்பர் 29-ம் தேதி தந்தி மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. கடந்த 40 ஆண்டுகளில் இருந்திராத வகையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிரிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கவும் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உடனடியாக 20.23 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றன என்று அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டிருந்தது.
அந்த நிதியுதவியைக் கொண்டு சிரியாவின் வடகிழக்கில் உள்ள சுமார் 15,000 சிறு விவசாயிகளுக்கு விதைகளையும் சாகுபடிக்கான தொழில்நுட்ப உதவிகளையும் அளிக்க விரும்புவதாக அந்த வேண்டுகோளில் யெஹியா விவரித்துள்ளார். விவசாயிகளை அந்த இடத்திலேயே தக்கவைத்தால்தான் சிரியாவின் சமூக, பொருளாதாரக் கட்டுகள் காக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு இந்த உதவியை அளிக்கத் தவறும்பட்சத்தில், சிரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து மக்கள் வாழ்வாதாரங்களைத் தேடி கூட்டம் கூட்டமாகக் குடும்பங்களுடன் இடம்பெயர்வார்கள். அது ஏற்கெனவே அரசியல் ஸ்திரமற்றுத் தவிக்கும் சிரியாவில் சமூக, பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்.
சிரிய மக்கள் பட்டினியால் வாடுவதை அரசு விரும்பாது என்றாலும், எல்லோருக்கும் உணவளிக்கும் ஆற்றல் தங்களிடம் இல்லை என்பதை சிரிய வேளாண்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டதாக யெஹியா சுட்டிக்காட்டியுள்ளார். சிரியாவின் ஊரகப் பகுதிகளில் வேளாண்மையும் அதைச் சார்ந்த தொழில்துறையும் முடங்கும் நிலை ஏற்பட்டால், சமூக அழிவும் ஏற்படும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுவிட்டது. சமூக அழிவு ஏற்பட்டால் அது அரசியல் ஸ்திரத்தன்மையை வெகுவாகவே பாதிக்கும்.
தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ உதவிகள் கிடைக்காவிட்டால் 15,000 சிறு விவசாயிகளும் அவர்களுடைய குடும்பங்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அல் ஹசாகா மாகாணத்திலிருந்து புறப்பட்டு, வேலை தேடி சிரியாவின் மேற்கில் உள்ள நகரங்களுக்குக் குடிபெயர்வார்கள். வயதில் மூத்தவர்கள், உடல் நலிவுற்றவர்கள், பெண்கள், குழந்தைகள் சொந்த ஊர்களிலேயே தனித்துவிடப்படுவார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து நிறுத்தப்பட்டு அவர்களுடைய படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஊரில் விடப்பட்ட குடும்பங்களுக்கு அனுப்புவதற்காகவும் வெளியேறியவர்கள் சம்பாதிக்க வேண்டியிருக்கும். முறையான பயிற்சியோ, தொழிற்கல்வியோ இல்லாத 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிரியாவின் சிறு நகரங்களுக்கு வேலைதேடிச் சென்று, அங்கிருக்கும் சமூக, பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவார்கள்.
இராக்கிலிருந்து வந்த அகதிகளால் தடுமாறிக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம், கிராமப்புற வறட்சி காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்வதைத் தாங்க முடியாது. விலைவாசி உயர்வு, மத்திய தர மக்களிடையே அதிருப்தி அதிகரிப்பு, சமூகக் கட்டுக்கோப்பில் குலைவு, பாதுகாப்பு அமைப்புகளில் பலவீனம் நிலவும் இச் சூழலில், மக்கள் இடம்பெயர அனுமதிப்பது நல்லதே அல்ல என்று யெஹியா அந்த தந்தி அறிக்கை வாயிலாக எச்சரித்திருக்கிறார்.
அறிக்கை அல்ல; தீர்க்கதரிசனம்
யெஹியாவின் தீர்க்கதரிசனம் பலித்துவிட்டது. 2010-ல் சுமார் 10 லட்சம் விவசாயிகள், கால்நடை மேய்ப்போர், அவர்களுடைய குடும்பங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி, ஏற்கெனவே மக்கள்தொகையால் பிதுங்கிக்கொண்டிருக்கும் நகரங்களில் குடியேறினர். இவர்களும் இராக்கில் நடந்த போரின்போது உயிர் தப்ப சிரியாவுக்குள் புகுந்த 10 லட்சம் இராக்கியர்களும் சேர்ந்துகொண்டனர். இவர்களில் யாருக்குமே உதவ அசாத் அரசு எதையுமே செய்யவில்லை. எனவே துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் அரசுக்கு எதிராக ‘அரபு வசந்தம்’ வீசத் தொடங்கியபோது சிரிய நாட்டு ஜனநாயக ஆதரவாளர்களும் களத்தில் குதித்தனர். அவர்களுக்கு, வறட்சியால் இடம்பெயர்ந்த மக்களில் ஏராளமானோர் ஆதரவாளர்களாக உடனடியாகக் கிடைத்தனர்.
மக்கள்தொகையும் மாறும் சூழலும்
இஸ்ரேல் நாட்டின் புவியியல் வல்லுநரான அர்னான் சோஃபர் கூறுவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ பிரசுரித்துள்ள ஒரு தகவலை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘கடந்த 60 ஆண்டுகளில் மத்தியக் கிழக்கு நாடுகளின் மக்கள்தொகை இரட்டிப்பாகியிருக்கிறது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் மக்கள் தொகை இரட்டிப்பாகப் பெருகவேயில்லை’ என்பதே அது.
பருவகால மாறுதல்கள்குறித்து வெளியாகும் சர்வதேச சஞ்சிகை கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட மற்றொரு செய்தியையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
‘20-வது நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே மத்தியக்கிழக்காசியப் பகுதியில் பருவநிலை மாறிக்கொண்டேவருகிறது. வெப்பமான இரவுகளின் எண்ணிக்கை கூடிவருகிறது, குளிர்ச்சியான பகல்களும் இரவுகளும் குறைந்துகொண்டே வருகின்றன’ என்பதே அது.
சிரியாவில் அரசு என்ற ஒன்று இருந்தபோதிலும் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியைப் போக்கவும் மக்களுக்கு உதவிகளை அளிக்கவும் அரசு எதையுமே செய்யவில்லை என்பதையும் இவற்றுடன் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். உள்
நாட்டுப் போரால் நாட்டின் அடித்தளக் கட்டமைப்பே சிதைந்துவிட்டால் இந்த வறட்சியைப் போக்க சிரிய அரசு எப்படிச் செயல்பட முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
சூப்பர்-ஸ்டார்ம்’ என்று அழைக்கப்படும் ‘சாண்டி’யைப் போல பெரும்புயல் ஒன்று எல்லா நாடுகளிலும் வீசத் தொடங்கினால், சிரியாவின் வறட்சி நிவாரணப் பணிக்குஎந்த நாட்டால் உதவ முடியும்? அமெரிக்காவுக்கு ‘சாண்டி’ புயலால் ஏற்பட்ட சேதங்களைப் போக்க 6,000 கோடி டாலர்கள் தேவைப்பட்டன.
சிரியாவில் சன்னிகள், ஷியாக்கள், ஆலவைட்டுகளுக்கிடையே நடக்கும் சண்டைக்குப் பண உதவிசெய்யும் ஈரான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். “நீங்கள் பருவநிலை மாறுதல்களாலும் அகதிகளாலும் நிரம்பியுள்ள பாதிக்கப்பட்ட பகுதியைக் கைப்பற்ற கோடிக் கணக்கில் பணம் செலவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் சிரியாவின் தற்காப்புத் திறனை வளர்க்கவும் அதன் வறட்சியைப் போக்கவும் இந்த உதவிகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வருந்த நேரிடும்.”
இப்படிச் சொல்வதன் மூலம், யாருக்கும் பலனில்லாமல் பாலைவனச் சூறாவளியைப் பார்த்துக் கத்திக்கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. ஆனால். இதைவிட சொல்வதற்குப் பயனுள்ள ஆலோசனை எதுவும் என்னிடம் கிடையாது.