நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday 19 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 11





புகழின் உச்சாணிக் கொம்பில் ஊஞ்சல் கட்டி, ஆனந்தமாக ஆடியபடியே உலக நாடுகள் மத்தியில் தங்களை அலங்கோலமாக்கிய ஜூலியனுக்கு அமெரிக்கா கொடுத்த பதிலடி தான் ஸ்விடனைச் சேர்ந்த அன்னாவின் வழக்கு என்று பெரிதும் நம்பப்படுகிறது. காரணம் அன்னா ஏற்கனவே கியூபாவில் சில வருடங்கள் வசித்தவர். அங்கு பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பிற்கு உதவியதற்காக, கியூபாவை விட்டு துரத்தியடிக்கப்பட்டவர். அன்னா உதவிய அந்த அமைப்பிற்கான பொருளாதார வாய்க்கால் சி.ஐ.ஏ வின் பணப்பெட்டியில் சென்று முடிவது உபரித் தகவல். மேலும் வழக்குத் தொடர்ந்த சில மணி நேரங்களில் அன்னாவும், சோபியாவும் தாங்கள் ஜூலியனைச் சந்தித்து, உறவாடிய பொழுதுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட இணையப்பதிவுகள்( Facebook, twitter etc) அழித்து விட்டனர். 'அவர்கள் ஆட்சியில் திருடினார்களே, நாங்கள் என்றாவது கேட்டதுண்டா.. இன்று எங்களை மட்டும்.." என்று கலங்கியதும், இவனைக் குற்றம் சொல்வதற்கு அவன் யோக்கியமா என்ற நோக்கில் சிந்திக்க வைத்து, குற்றத்தை மறக்கடிக்கும் அதே காளிமார்க் பவண்டோ காலத்து தொழில்நுட்பம். ஜூலியனின் படுக்கையறைக்குள் மறைந்து கொள்ளப் பார்த்த அமெரிக்காவின் முயற்சி சிறிதளவுக்கே வெற்றி பெற்றது.


அமெரிக்காவின் துரத்தல், ஸ்விடன் மோகினிகளின் சட்டச்சிக்கல்கள் என்று கடும் நெருக்கடியில் ஜூலியன் இங்கிலாந்து வந்திறங்கியதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள், விரைவில் இணையத் தொழில்நுட்பத்தின் பாடங்களாக்கப் பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எத்தனை, எத்தனையோ போர்களையும், போராட்டங்களையும் கடந்து வந்த வரலாற்றின் பக்கங்களுக்கு முதல் முறையாக, புத்தம் புது ஈஸ்ட்மென் கலரில் கிடைத்த விஷயம் தான் ஜூலியனுக்கும், அமெரிக்காவிற்கும் நடந்த இணைய யுத்தம் (Cyber War). இந்த இணைய யுத்தத்தின் பார்வையாளர்களான பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இது ஒரு விநோதமான அனுபவம். Encryption, Mirrored Sites, DDos, DNS Servers, Web Hosting போன்ற தொழிநுட்ப வார்த்தைகள் வெகுஜன ஊடகங்களில் சரளமாகப் புழங்கத் தொடங்கின.


ஒரு ஆதிக்கம் மிகுந்த நாட்டின் அரசாங்கம் நினைத்தால் சரியோ, தவறோ என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்தான செயல்முறை விளக்கமும், இணையத் தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்கள் நினைத்தால் ஒரு கணிணியையும், இணைய இணைப்பையும் வைத்துக் கொண்டு யாரையும் அலறியடித்து ஓட வைக்க முடியுமென்பதும் சிறப்புற நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஜூலியன் இங்கிலாந்திற்கு ஆறு மாத விசாவில் வருகை தந்திருக்கிறார் என்பது தான் தெரியுமே தவிர, அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு பக்கம் புதிது, புதிதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்கள் அனுதினமும் அம்பலமாகிக் கொண்டே இருந்தன. மறுபக்கம் ஸ்விடன் அரசு இண்டர்போல் அமைப்பை அணுகி தங்களிடம் ஒரு பிராது இருக்கிறதென்றும், அது குறித்தான பஞ்சாயத்துக்கு உடனே ஜூலியனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுத்தது. இண்டர்போல் ஜூலியனைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து அரசை அணுகிய போது, ஆவணங்களில் ஜூலியனின் பெயர்க்குறிப்பில் எழுத்துப்பிழை இருப்பதைக் கண்டுபிடித்து சிலிர்த்துக் கொண்டு நிராகரித்து விட்டது. ஆவணங்களைத் திருப்பி ஸ்விடனிடம் கொண்டு போய் திருத்தி எழுதிக் கொண்டு வர இண்டர்பொல் அமைப்பிற்கு இரண்டு நாட்கள் பிடித்தன. இப்போது எல்லாம் இருக்கிறது ஆனால், ஜூலியனை எங்கே போய் பிடிப்பதென குழம்பினர். இந்த இடைவெளியை எதிர்பார்த்திருந்த அமெரிக்கா 'நாந்தான் இருக்கேன்ல' என்று களத்தில் குதித்தது.


பொதுவாக ஒரு இணையதளத்தின் பெயர் என்பது தனி விஷயம் (domain name), அந்த இணையத்தளத்திற்கானக் கோப்புகளை அல்லது தகவல்களை வைத்திருக்கும் கணிணி/வழங்கி என்பது தனி விஷயம் (hosting server). இந்த இரண்டையும் கோர்த்து விடும்போது தான் நீங்கள் உங்கள் உலாவியில்(browser) இணையதளத்தின் பெயரை உள்ளிட்டதும் அத்தளத்தின் தகவல்களைப் பார்க்க முடிகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இணையதளத்தின் பெயரும் அதன் கோப்புகளைக் கொண்ட வழங்கி பற்றிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் தான் இணையதளப் பெயர் வழங்கி (DNS - Domain Name Servers). . கடந்த மூன்று வருடங்களாக ஜூலியன் அமைத்திருந்த உலகளாவிய விக்கிலீக்ஸ் ஆர்வலர்களின் வலையமைப்பினையும், அவர்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு, எல்லாமே ஜூலியன் ஒரு ஆள் தான் என்று நினைத்த அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக நேரிடையாக, உலக மக்கள் அனைவரையும் சாட்சியாக வைத்துக் கொண்டு தனது அதிகாரங்களை ஜூலியனை நோக்கி பிரயோகித்து, விக்கிலீக்ஸ் எனும் தேன்கூட்டில் கை வைத்தது.

விக்கிலீக்ஸ் தளத்திற்கென்று உலகெங்கும் பல நிறுவனங்களிடமும் கோப்புகளை சேமித்து வைத்து தங்கள் இணைய தளத்திற்கு வழங்குவதற்கு ஏதுவாக வழங்கி சேவைகளை (hosting servers) பெற்றிருந்தார்கள். அதன் மூலம் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டிலுள்ள வழங்கிகள் மூலமே விக்கிலீக்ஸ் தளத்தினை எளிதாக, விரைவாக பார்வையிட முடியும். விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய ஆவணங்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் இது போன்ற சில ஏற்பாடுகள் செய்து வைக்கப்படும். முதல் காரணம், ஒரு இடத்தில் தளம் முடக்கப்பட்டால் மறு இடத்தில் வேலை செய்யும். இரண்டாவது, கூட்டம் கும்மும்போது இணையப் போக்குவரத்து அதிகமாகி தளம் செயல்பட முடியாமல் போக வாய்ப்பிருப்பதால் இணையப்போக்குவரத்தினை பல்வேறு கோப்பு வழங்கிகளுக்கும் பிரித்தனுப்பி சமாளிக்க முடியும்.


இதற்குள் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸ் தளத்தினை அல்-குவைதா, பின் லேடன் அளவிற்கு அமெரிக்காவிற்கான அச்சுறுத்தல், அமெரிக்காவின் மீதான இணையத் தாக்குதல் என்றெல்லாம் குரலெழுப்பி கிட்டத்தட்ட விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்காமலும், ஆதரிக்காமலும் இருப்பது தான் தேசபக்தியின் அடையாளம் என்கிற அளவுக்கு பிரச்சாரம் செய்து தங்கள் முகங்களை ஊடகங்களில் காண்பித்து மகிழ்ந்தார்கள். இதையே வாதமாக வைத்து அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடியால் விக்கிலீக்ஸ் தள்த்திற்கான அனைத்து DNS சேவைகளும் முடக்கப்பட்டன, உலகப் புகழ்பெற்ற அமேசான் (Amazon.com) நிறுவனம் விக்கிலீக்ஸ் தளத்திற்காக தாங்கள் வழங்கி வந்த கோப்பு வழங்கிகளுக்கான(hosting server) சேவையினை நிறுத்தியது. இனி யாரும் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்க்க முடியாது என்று நினைத்து சரக்கடித்து கொண்டாட எத்தனிக்கும் முன்னரே தங்கள் தளத்தினை 30க்கும் மேற்பட்ட வெவ்வெறு புதிய இணையதள முகவரிகள் மூலம் பார்க்கலாம் என்று விக்கிலீக்ஸ் சார்பில் டிவிட்டரில் தெரிவிக்கப் பட்டது. 30 முகவரிகள், நூறாகி, நானூறாகி, இன்றைய தேதியில் ஐநூறுக்கும் மேலான இணைய தள முகவரிகளின் மூலம் விக்கிலீக்ஸ் தளத்தினைப் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடுகள் களைகட்டிய வேகத்தினைப் பார்த்து அமெரிக்கா திகைத்துப் போனது.

ஊரெல்லாம் ஊடக சுதந்திரத்திற்கு ஊர்வலம் போகும் அமெரிக்காவில் ஒரு ஊடக நிறுவனம் (அமேசான்) எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தப்படலாம் என்பதை உலகுக்குக் காட்டவே அந்நிறுவனத்திடம் வழங்கிச் சேவையினைப் பெற்றிருந்தோம் என்று ஜூலியன் அலட்சியமாக சொல்லி வைக்க, அமெரிக்காவின் இரத்த அழுத்தம் மேலும் எகிறியது.

ஒரே நேரத்தில் இத்தனை முகவரிகளில்(mirrored sites) எப்படி விக்கிலீக்ஸ் தளம் விரைவாக செயல்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஜூலியனின் கைது, கைதுக்கு எதிரான போராட்டங்கள், பின் பிணையில் வெளிவந்தது ஆகியவை அடுத்தப் பகுதியில்.

எங்கெல்லாம் ஆவணங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டு, மாற்றங்கள் தடுக்கப்படுகின்றன - ஜூலியன்

No comments:

Post a Comment

கருத்துக்கள்