நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Thursday 8 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 6




அடிப்படையில் ஜூலியன் மிக அமைதியான நபர். எந்தவொரு அலட்டலோ, மேதாவித்தனமோ இல்லாமல் மென்மையாகப் பேசிப் பழகும் ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் மட்டுமே உயிர்நாடி. அதற்கென்று பாதிப்பு வரும்பொழுது மனிதர் புயலென சீறுவதில் நொடிப்பொழுதும் தயங்குவதில்லை. ஊடக சுதந்திரத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் சில இணையத் தளங்களைத் தடை செய்யப் போவதாகச் செய்த அறிவிப்பு, மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. ஊரெல்லாம் துயர்துடைக்கும் மண்ணின் மைந்தன், தன் வீட்டில் விசேஷம் என்றால் சும்மா இருக்க முடியுமா?. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரெலியாவின் ஊடகச் சுதந்திரக் கோவணம் காற்றில் பறக்க விடப்பட்டது, எந்தெந்த இணையத் தளங்கள் தடைசெய்யப்படப் போகின்றன என்ற பட்டியல் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அவற்றுள் சிறார் -பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், மற்ற சட்ட விரோத தளங்களோடு, சில நல்ல தளங்களும் இருந்தது. ஊடகங்களின் கேள்விக் கணைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் துளைத்தெடுத்தன. முதலில் அப்பட்டியலை மறுத்த ஆஸ்திரேலியா, பின்னர் ஒருவாறாக ஒப்புக் கொண்டது.

ஆஸ்திரெலியாவுக்கு கொடுத்த அல்வாவின் விளைவு ஜெர்மனியில் விளைந்தது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஜெர்மனி இணைய முகவரியின்(www.wikileaks.de) உரிமையாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலருமான தியோடர் என்ற ஜெர்மானிய இளைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடந்தது. விஷயம் கேள்விப் பட்டது ஜூலியன் சுருக்கமாக, காட்டமாக ஊடகங்களின் மூலம் ஒரு அறிக்கை விடுத்தார். அது அறிக்கை என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருத்தமானது. ஒரு நிறுவனத்தின் சார்பில் என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதன், வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கெதிராக விடுத்த அறைகூவலாகவும், ஊடகவியலாளார்கள் பெருமை கொள்ளும் விதமாகவும் அந்த அறிக்கை அமைந்தது. "நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்", இது தான் அந்த அறிக்கையின் கடைசி வரிகள்.


ஜூலியனிடம் மோதினால் என்ன நடக்கும் என்று தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களான ஜெர்மனியர்களின் அரசாங்கத்திற்குப் புரிந்தே இருந்தது. அதற்குப்பின் விக்கிலீக்ஸ் சம்பந்தமாக ஜெர்மனி எதிலும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக பலநாடுகளிடம் சோதனை அனுபவம் பெற்ற ஜூலியன், அமெரிக்காவின் பக்கம் திரும்பினார். அன்று பார்வையைத் திருப்பியவர் தான், இன்று குரல்வளைப் பிடி, பிடித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்கிறது. அமெரிக்காவில் ஜூலியனிடம் முதலில் சிக்கியது ஒரு தேவாலயக் குழுமம் (church of scientology). கிட்டத்தட்ட நம்மூர் சித்துவேலை பகவான்களின் ஆசிரமக் குழுமங்கள் மாதிரி, சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. அதில் நடக்கும் உள்ளடி வேலைகள், முறைகேடுகள், சில போதைப் பொருட்கள் கையாடல் சம்பந்தமாக என்று நீள்கிறது ஆவண விவரங்கள். அனைத்தும் ஒருநாள் அதிகாலை பனிப்பொழுதில் விக்கிலீக்ஸ் தளத்தில் மங்களம் பாடப்பட்டது.


அடுத்த சில தினங்களில் தேவாலயக் குழுமத்தின் தலைமை, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது. 'பேரன்பும் மதிப்பிற்கும் உரிய விக்கிலீக்ஸ் சமூகத்தாருக்கு, அனேக நமஸ்காரங்கள். தாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின் படி எங்கள் குழுமத்திற்குச் சொந்தமானவை. அவற்றை நீங்கள் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். நீங்களாக நீக்கினால் உத்தமம். இல்லையேல்...' என்ற கோணத்தில் சென்றது அக்கடிதம். சும்மாவே ஆட்டம் காட்டும் ஜூலியனுக்கு, இதைப் படித்ததும் கேட்கவா வேண்டும். "உங்கள் கடிதம் ஊடக சுதந்திரத்திற்கு நீங்கள் விடுக்கும் நேரடியான மிரட்டல். உங்களின் இந்த மிரட்டலுக்கு எங்களின் பதிலாக உங்கள் தேவாலயம் சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆயிரம் ஆவணங்கள் வெளியிடப்படும்" என்று பதிலறிக்கை விடப்பட்டது. அத்தொடு நில்லாமல் அடுத்த வாரமே, ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தில் சொன்னபடி வெளியிடப்பட்டது. 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்பதை உலகுக்கும் சொல்லாமல் உணர்த்தினார் ஜூலியன். அதன் பிறகு அத்தேவாலயக் குழுமம் வாயேத் திறக்கவில்லை :).


இது வரை நிறுவனங்களையும், அரசாங்கத் துறைகளையும் சோதித்துப் பார்த்த ஜூலியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் தனிநபர் குறித்த சட்டப்பாதுகாப்பினைப் பரிட்சித்துப் பார்க்க சிக்கியவர் தான் அலாஸ்கா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சாரா பாலின். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர். அழகுக்கும் "அறிவு"க்கும் பெயர் போனவர். இவரின் 'புத்தி'சாலித்தனமான பேட்டிகளும், அறிக்கைகளும் அமெரிக்காவில் மிகப்பிரசித்தம்..சில பேர் முகத்தைப் பார்த்தாலே எப்படியும் கடன் தந்து விடுவார் என்று கணிப்பவர்கள் இருக்கும் இக்காலத்தில், சாராவைப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ, அவரின் யாஹூ மின்னஞ்சல் முகவரி, விக்கிலீக்ஸ் புண்ணியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு மாகாணத்தின் கவர்னரின், அதுவும் ஒரு பெண்ணின் மின்னஞ்சலில் என்னென்ன வில்லங்கங்கள் இருந்தன?... அடுத்த பகுதியில்.


அநீதிகளைத் தடுப்பதற்கான முதல்படி, அநீதிகள் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது தான் - ஜூலியன்

No comments:

Post a Comment

கருத்துக்கள்