நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Friday, 17 February 2012

மின்வெட்டு தமிழகம் முழுவதும் 5 மணி நேரமாக குறைப்பு

தமிழகம் முழுவதும் வரும், 20ம் தேதி முதல், புதிய மின்வெட்டு முறை அமலுக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மாவட்டங்களுக்கு, தற்போதைய மின்வெட்டு நேரத்தில், ஒரு மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை குறைகிறது. தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. 


ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக, எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என, நேரம் குறிப்பிடப்படாமல் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். புதிய முறை: அனைத்து பகுதிகளுக்கும் மின்வெட்டை சரிசமமாக, திட்டமிட்ட நேரத்தில் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இதற்கான புதிய திட்டத்தை, மின் வாரியம் தயாரித்துள்ளது. இந்த திட்டம், வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன் விவரம்: சென்னை நகரம், மின்சார நிர்வாகத்தில் வடக்கு, தெற்கு என இரண்டு மண்டலங்களாகவும், நான்கு வட்டங்களாகவும், 15 பிரிவுகளாகவும் உள்ளது. இவை, மின்வெட்டுக்காக மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரம் தனியாகவும், செங்கல்பட்டு, வடசென்னை மற்றும் பொன்னேரி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரத்திற்கு மட்டும், 340 மெகாவாட்டும், மற்ற இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து, தினமும் 600 மெகாவாட் அளவுக்கும், மின்வெட்டு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், தினமும் கண்டிப்பாக, இரண்டு மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும். காலை 8 மணி முதல், மாலை 5 மணிக்குள், சுழற்சி முறையில் தனித்தனியே ஒரு மணி நேரம் என, இரண்டு முறை தடை செய்யப்படும். மாதம்தோறும் 8 மணி நேரம்: இரவு நேரத்தில் சென்னைக்கு மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மாதம் ஒரு முறை எட்டு மணி நேர மின்வெட்டை அமலாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறையும்: சென்னைக்கு, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாவதால், மாவட்டங்களில் இரண்டு மணி நேரம் வரை, மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது. 


சென்னை தவிர மற்ற இடங்களுக்கு, காலை 5 மணி முதல், இரவு 12 மணி வரை, சுழற்சி முறையில் அதிகபட்சம் ஐந்து மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும். இரவு 12 மணி முதல், காலை 5 மணி வரை, ஒவ்வொரு பகுதிக்கும், அரை மணி நேரம் மட்டும் மின்வெட்டு அமலாகும். இனி மாதம்தோறும், மின்வெட்டு நேரம் குறித்து, மின் வாரிய பகுதி அலுவலகங்கள் அறிவிப்பு வெளியிடும். அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மின்வெட்டு இருக்காது. தற்போது, அறிவிக்கப்படாத நிலையில், எப்போது மின்சாரம் வரும், போகும் என்ற பரிதாபமான நிலை, வரும் 20ம் தேதி முதல் நிச்சயம் மாறும் என்றும், அறிவிக்கப்படாத நேரங்களில் கண்டிப்பாக மின்சாரம் இருக்கும் என்றும், மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். தற்போதைய மின்சார நிலை குறித்து முதல்வர் ஜெயலலிதா, கோட்டையில் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 


இந்த ஆலோசனைக்குப் பின்னர், மின்வெட்டு விவரங்களை முதல்வர் வெளியிடுவார். சலுகை கொடுத்தால்... சஸ்பெண்ட்: அரசியல்வாதிகள், வி.ஐ.பி.,க்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவன உரிமையாளர்களிடம், பல இடங்களில், துணைமின் நிலையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்ளூர் பணியிலுள்ள அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அந்த பகுதிகளுக்கு மின்வெட்டை குறைத்து, அதற்கு பதில் மற்ற பகுதிகளுக்கு அதிகநேரம் மின்வெட்டு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வெட்டை அனைத்து இடங்களிலும் சமமாக அமல்படுத்த வேண்டுமென, அனைத்து பிரிவு அலுவலக உதவி செயற்பொறியாளர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்படும். தனிப்பட்ட முறையில், எந்த பகுதிக்காவது மின்வெட்டு இல்லாமல் வைத்திருப்பது, தங்களுக்கு வேண்டாத பகுதியில், அதிக நேரம் மின்வெட்டை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அதிக மின்வெட்டை அமல்படுத்தி, அதற்கு பதில் மற்ற பகுதிகளுக்கு அதிக மின்வெட்டை அமல்படுத்தும் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; எந்த பாரபட்சமுமின்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். இதுகுறித்து, மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, என்றார்.